ஊழல் வழக்கு விசாரணை: ஆஜராகாத நவாஸ் ஷெரீப்

தினமலர்  தினமலர்

இஸ்லாமாபாத்: ஊழல் வழக்கு விசாரணைக்கு, சம்மன் அனுப்பியும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஆஜராகவில்லை. 'பனாமா கேட் ஊழல்' வழக்கில், அந்நாட்டு பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் ஜூலை 28ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
நவாஸ் ஷெரீப், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ், மகள் மரியம் நவாஸ் ஆகியோர் மீது தேசிய பொறுப்புடைமை அமைப்பு, வழக்கு பதிவு செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை 6 மாதங்களில் முடிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். இந்நிலையில் அல் அஜிஜியா உருக்கு ஆலை வழக்கை தேசிய பொறுப்புடைமை அமைப்பு முதலில் விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்த விசாரணையை அந்த அமைப்பின் தலைமை இயக்குனர் நாசிர் இக்பால் தலைமையிலான குழுவினர் நடத்த அமர்த்தப்பட்டுள்ளனர். லாகூரில் உள்ள தேசிய பொறுப்புடைமை அமைப்பின் அலுவலகத்தில் ஆஜர் ஆகுமாறு நவாஸ் ஷெரீப்புக்கும், அவரது மகன்கள் உசேன் நவாஸ், ஹசன் நவாஸ் ஆகியோருக்கும் சம்மன் பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அவர்கள்
ஆஜர் ஆகவில்லை.
இதனால் அவர்கள் மீது, என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படுமா என்பது குறித்து, தேசிய பொறுப்புடைமை அமைப்பின் தலைவர் கமர் ஜமான் சவுத்ரி முடிவு எடுப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் தீர்ப்பை மறு ஆய்வு செய்யுமாறு, நவாஸ் ஷெரீப்பும், அவரது மகன்களும் சுப்ரீம் கோர்ட்டில் ஆக.15ல் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மறு ஆய்வு மனுவை சுப்ரீம் கோர்ட் விசாரித்து தீர்ப்பு அளிக்கும் வரை, தேசிய பொறுப்புடைமை அமைப்பின் விசாரணைக்கு ஆஜர் ஆவதில்லை என நவாஸ் ஷெரீப் முடிவு எடுத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரத்தில் தேவைப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் மீது தேசிய பொறுப்புடைமை அதிகாரிகள் கைது நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.

மூலக்கதை