வங்கதேச பிரதமரை கொல்ல முயற்சி : 10 பயங்கரவாதிகளுக்கு தூக்கு

தினமலர்  தினமலர்

தாகா: வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல முயற்சித்த வழக்கில், 10 பயங்கரவாதிகளுக்கு துாக்கு தண்டனையும், ஒன்பது பயங்கரவாதிகளுக்கு, 20 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வங்கதேசத்தில், 2000ம் ஆண்டில், ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தார். அப்போது, கோபால்கஞ்சில் நடந்த பொது கூட்டத்தில் பங்கேற்க இருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, இரண்டு சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை, பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த வெடி குண்டுகள், ஹசீனாவை கொல்ல வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. விசாரணையில், வெடிகுண்டுகளை வைத்தது, தடை செய்யப்பட்ட, ஹர்கதுல் ஜிகாத் - இ - இஸ்லாமி பங்களாதேஷ் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என தெரிந்தது.
இது தொடர்பாக, அந்த அமைப்பின் தலைவன், முப்தி ஹன்னான் உட்பட, 25 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை, தாகா நீதிமன்றத்தில் நடந்தது. இதற்கிடையில், ஹூஜி தலைவன் முப்திக்கு, மற்றொரு கொலை வழக்கில், துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட, 25 பயங்கரவாதிகளில், 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். 10 பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையும், ஒன்பது பேருக்கு, 20 ஆண்டு சிறை தண்டைனயும் விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மூலக்கதை