மரத்தடியில் மாணவிகள்: கட்டட வசதியில்லாததால் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம், அடிப்படை வசதிகள் தேவை

தினமலர்  தினமலர்
மரத்தடியில் மாணவிகள்: கட்டட வசதியில்லாததால் காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் கட்டடம், அடிப்படை வசதிகள் தேவை

காரியாபட்டி:காரியாபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதிய கட்டட வசதியில்லாததால் இடநெருக்கடி ஏற்பட்டு, மாணவிகள் மரத்தடியில், தரையில் உட்கார்ந்து படிக்கின்றனர்.மழைகாலத்தில் படிக்க, நடமாட சிரமப்படுகின்றனர், ஒரே வகுப்பறையில் நெருக்கடியில் மாணவிகள் உட்காருகின்றனர்.
காரியாபட்டியில் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியில் ஆயிரத்து 200 பேர் படிக்கின்றனர். சுற்றி உள்ள கிராமங்களில் மேல்நிலைப்பள்ளிகள் இருந்தாலும், மாணவிகள் இங்கு படிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம், அதிக தேர்ச்சி சதவீதம்தான். எத்தனை மாணவிகள் வந்தாலும் இடம் இல்லை என சொல்லாமல் பள்ளியில் சேர்க்கை நடைபெறுகிறது. வேறு வழியில்லாமல் ஒவ்வொரு வகுப்பிற்கும் சில பிரிவுகள் ஏற்படுத்தி, பாடம் நடத்துகின்றனர். மாணவிகள் சேர்க்கைக்கு ஏற்ப போதிய கட்டட வசதி, கூடுதல் ஆசிரியைகள் இல்லாததால் சிரமப்படுகின்றனர். வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் மாணவிகள் படிக்கின்றனர். மழை காலத்தில் மழை நீர் தேங்கி, சேரும்சகதியுமாக இருப்பதால் மாணவிகள் உட்கார முடியாமல் அன்றைய பாடத்தை அன்றே படிக்க முடியாமல் போகிறது. பெற்றோர் கோரிக்கைபள்ளி வளாகம் பள்ளமாக இருப்பதால் சுற்றுப்புறங்களில் இருந்தும் மழைநீர் பள்ளியில் தெப்பம் போல் தேங்கிவிடுகிறது. இதனால் நடப்பதற்கே மாணவிகள் சிரமப்படுகின்றனர். அதுமட்டுமல்ல, இருக்கிற ஆசிரியைகளைக் கொண்டு அனைத்து பாடம் நடத்த வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியைகள் உள்ளனர். தேர்வு விடைத்தாள்களை திருத்துவதற்கு ஆசிரியைகள் சிரமப்படுகின்றனர்.
இதனால் திருத்திய விடைதாளை மாணவிகளுக்கு அளிப்பது தாமதம் ஏற்படுகிறது. கூடுதல் ஆசிரியைகள் நியமிக்க பல முறை மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை வைத்தும், நடவடிக்கை இல்லை. இருக்கின்ற ஆசிரியைகள் தங்கள் ஓய்வு நேரத்தை மாணவிகளின் கல்விக்கு செலவழிக்கின்றனர். தொடர்ந்து 10 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்று சாதனை செய்கின்றனர். கவனச் சிதறல்மேலும் பள்ளியில் அடிப்படை வசதி, விளையாட்டு மைதானம் இல்லை. ஒரே நேரத்தில் நுாற்றுக்கணக்கான மாணவிகள் கழிப்பறையை பயன்படுத்த செல்வதால் நெருக்கடி ஏற்படுகிறது. கூடுதல் கட்டட வசதி இல்லாமல், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்களுக்கு ஒரே வகுப்பில் மாணவிகளை உட்கார வைப்பதால் இட நெருக்கடி ஏற்படுகிறது. கை, கால்களை அசைக்க முடியாமல் மாணவிகள் உட்காருவதால், கவனம் சிதறுகிறது. மாணவிகளின் நிலையை புரிந்து கொண்ட ஆசிரியைகள் வெளியில் சொல்லமுடியாமல் உள்ளனர்.
சாதனை தொடர வேண்டும்
இது ஒருபுறம் இருக்க, தற்போது, பிளஸ் 1 வகுப்பிற்கும் பொதுத்தேர்வு ஏற்பாடு நடந்து வருகிறது. ஏற்கனவே பற்றாக்குறையால் சிரமப்படும் ஆசிரியைகளுக்கு, கூடுதல் பொறுப்பாக பொதுத்தேர்வு அமையும் என புலம்புகின்றனர். அடிப்படை வசதி, கட்டட வசதி, கூடுதல்ஆசிரியைகள் இல்லாமலே சாதிக்கும் இந்த பள்ளியில் வசதிகளை மேம்படுத்தி, ஆசிரியைகளை அதிகம் நியமித்தால் சாதனை தொடரும். இல்லாவிட்டால் கேள்விக்குறியாகும். இப்பள்ளிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
நியமனம் தேவை
சிவகுமார், சமூகஆர்வலர், காரியாபட்டி: ஒரு சில அரசு பள்ளிகள்தான் தனியார் பள்ளிகளுக்கு இணையாக செயல்பட்டு வருகின்றன. அதில் காரியாபட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியில் அடிப்படை வசதி என்பது குறைவு. குறிப்பாக சுகாதார வசதி, கட்டட வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் போதிய அளவில் இல்லை. கல்வி மட்டும் அல்ல, விளையாட்டிலும் மாணவிகள் ஜொலிக்க வேண்டும். அதற்கு தேவையான விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தரவேண்டும்.
தொடர்ந்து, நுாறு சதவீதம் தேர்ச்சி பெறும் இந்த பள்ளிக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால், இன்னும் சாதிக்க முடியும். கூடுதல் ஆசிரியைகளை நியமிக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மூலக்கதை