குழந்தைகள் பலி விவகாரத்தில் காங். பாஜ மோதல் அரசு மெத்தனத்தால் உருவாக்கிய துயர சம்பவம் : ராகுல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குழந்தைகள் பலி விவகாரத்தில் காங். பாஜ மோதல் அரசு மெத்தனத்தால் உருவாக்கிய துயர சம்பவம் : ராகுல்

கோரக்பூர்: கோரக்பூர் மருத்துவமனையில் குழந்தைகள் பலியான விவகாரத்தில் ராகுலும், யோகியும் ஒருவரையொருவர் பரஸ்பரம் குற்றம் சாட்டி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜ ஆட்சி நடைபெற்று வருகிறது.

இவர் கோரக்பூர் தொகுதி எம்பியாக இருந்து பாஜ வெற்றிக்கு பிறகு முதல்வரானார். இந்த சூழலில் அவரது சொந்த தொகுதியான கோரக்பூரில் உள்ள மருத்துவமனையில ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கடந்த சில நாட்களில் மட்டும் 100க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.

ஆனால் குழந்தைகள் மூளை வீக்க நோயால் தான் இறந்து விட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இருந்த போதிலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.



இதற்கிடையில் கோரக்பூர் சம்பவம் குறித்து காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அங்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ராகுல் கூறுகையில், இது அரசே தனது மெத்தன போக்கால் ஏற்படுத்திய துயர சம்பவமாகும்.

நான் சந்தித்தவர்கள் எல்லாம் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாகவே குழந்தைகள் இறந்ததாக தெரிவித்துள்ளனர். பலருக்கும் அங்கு கையால் அழுத்தம் கொடுக்கும் ஆக்சிஜன் பை கொடுக்கப்பட்டுள்ளது.

அதை பல மணிநேரம் அழுத்தியபடியே இருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. எனவே குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு யோகி அரசுதான் முழுக்க முழுக்க காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் முதல்வர் யோகியும் விழா ஒன்றில் கலந்து கொள்ள கோரக்பூர் வந்திருந்தார்.

முன்னதாக அவர் கோரக்பூரில் உள்ள கோசாலைக்கு சென்று அங்கு பாதுகாக்கப்படும் பசுக்களுக்கு வைக்கோல் உள்ளிட்ட தீவனங்களை வழங்கினார். பின்னர் விழாவில் கலந்து கொண்ட யோகி பேசுகையில் ராகுலின் கோரக்பூர் வருகையை தாக்கி பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், டெல்லியில் அமர்ந்திருக்கும் இளவரசருக்கு தூய்மை பாரதம் திட்டத்தின் மதிப்பு குறித்து எதுவும் தெரியாது. ஏதோ ஒரு சுற்றுலாத்தலத்திற்கு வருவதை போல கோரக்பூருக்கு ராகுல் வந்து செல்கிறார்.

இதை நாம் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. கிழக்கு உத்தரபிரதேச மக்களை பற்றி குறை கூறுபவர்களுக்கு நான் நேரடியாக சவால் விடுகிறேன்.

அவர்கள் நேரடியாக அங்கு வந்து மக்கள் மத்தியில் தூய்மை குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்ய முடியுமா? என்றும் யோகி கேள்வி எழுப்பியுள்ளார்.

.

மூலக்கதை