உ.பி.யில் சூடு பிடிக்கும் அரசியல் களம் மோடியை காணவில்லை என போஸ்டர்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உ.பி.யில் சூடு பிடிக்கும் அரசியல் களம் மோடியை காணவில்லை என போஸ்டர்கள்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் ராகுல்,சோனியாவை காணவில்லை என்ற போஸ்டர் பரபரப்பை தொடர்ந்து தற்போது மோடியை காணவில்லை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால் அங்கு அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. உத்தரபிரதேசத்தின் ரேபரேலி, அமேதி தொகுதிகள் காங்கிரஸ் தலைவர் சோனியா, ராகுல் ஆகியோரின் தொகுதிகளாகும்.

கடந்த வாரத்தில் இந்த இரண்டு தொகுதிகளிலும் சோனியா, ராகுல் ஆகியோரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது. இது முழுக்க முழுக்க பாஜவின் சதி வேலை என காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.

இந்த சூழலில் பிரதமர் மோடி வெற்றி பெற்ற வாரணாசி தொகுதியும் உத்தரபிரதேசத்தில் தான் உள்ளது. தற்போது ராகுல், சோனியாவைத் தொடர்ந்து வாரணாசியிலும் மோடியை காணவில்லை என்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.



நேற்று வாரணாசியின் பல்வேறு பகுதிகளிலும் ஒட்டப்பட்டிருந்த அந்த போஸ்டர்களில்,  வாரணாசி எம்பி மோடி தனது சொந்த தொகுதியில் இருந்து மாயமாகிவிட்டார். கடைசியாக மார்ச் 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கு தொகுதிக்கு வந்தவர் பின்னர் மாயமானார்.

அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. இதுகுறித்து வாரணாசி மக்கள் காவல்துறையில் புகார் அளிக்க வேண்டியிருக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், மோடி, நீங்கள் எந்த நாட்டுக்கு போயிருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது என்றும் கிண்டலாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பிரதமரை கிண்டலடித்து ஒட்டப்பட்ட போஸ்டர்களால் நேற்று இரவு வாரணாசி நகரம் பரபரப்பாக காணப்பட்டது. போஸ்டர்களை ஒட்டி சென்ற ஆசாமிகள் யார் என போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

அதே நேரத்தில் இரவோடு இரவாக சந்து பொந்துகளில் எல்லாம் தேடி தேடி சென்று அனைத்து போஸ்டர்களையும் போலீசார் கிழித்தனர். இது போலீசாருக்கு மிகுந்த தலைவலியை கொடுப்பதாக அமைந்து விட்டது என போலீசார் அலுத்து கொண்டனர்.

தற்போது இந்த விவகாரங்களால் உத்தரபிரதேச அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

.

மூலக்கதை