நட்சத்திர ஓட்டலில் தங்க வேண்டாம் அமைச்சர்களுக்கு மோடி கட்டுப்பாடு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நட்சத்திர ஓட்டலில் தங்க வேண்டாம் அமைச்சர்களுக்கு மோடி கட்டுப்பாடு

புதுடெல்லி: மத்திய அமைச்சர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அரசு வாகனங்களை சொந்த காரணங்களுக்கான பயன்படுத்த கூடாது என கண்டிப்புடன் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்தது முதல் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பிரதமராக பதவியேற்ற சமயத்தில், அரசு ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு வேலைக்கு வர வேண்டும், அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும், அரசு ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.



அரசு ஊழியர்கள் மட்டுமின்றி, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றவர்களும் விதிமுறைகளை பின்பற்றி பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், அமைச்சர்கள் தங்களது துறையில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும், மக்களுக்கான நலத்திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும், ஊழலுக்கு இடம் கொடுக்க கூடாது, அரசு பணத்தை வீணாகவும், ஆடம்பரமாகவும் செலவழிக்க கூடாது என பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில், சமீபகாலமாக அமைச்சர்கள் சிலர் அடிக்கடி நட்சத்திர விடுதியில் தங்குவது, அரசு வாகனங்களை சொந்த வேலைக்கு பயன்படுத்துவதாக புகார்கள் வந்தன. இதனால் அரசுக்கு செலவு அதிகமானது.

இந்நிலையில், கடந்த புதன்கிழமையன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற மோடி, இதுகுறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆடம்பர செலவுகளை குறைக்கும் வகையில், அரசு தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது,   அரசுக்கு சொந்தமான விடுதிகளில்தான் அமைச்சர்கள் தங்க வேண்டும் என்றும், நட்சத்திர விடுதிகளில் தங்குவதை தவிர்க்க வேண்டும் என மோடி கூறியுள்ளார்.



இதேபோல், அமைச்சர்களோ, அவரது உதவியாளர்களோ பொதுத்துறை நிறுவனங்களில் இருந்து எவ்வித சலுகையும் எதிர்ப்பார்க்க கூடாது என்றும், அரசாங்க வாகனங்கள் உள்ளிட்டவற்றை சொந்த காரணங்களுக்காக அமைச்சர்களோ, அவரது குடும்பத்தினரோ பயன்படுத்த கூடாது என எச்சரித்துள்ளார். அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்களது வாகனங்களில் சைரன் பயன்படுத்துவதற்கு தடை, அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் ஆடம்பரத்தை தவிர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு நட்சத்திர ஓட்டல்களில் அமைச்சர்கள் தங்குவதற்கும், அரசு சொத்துக்களை சொந்த காரணங்களுக்காக பயன்படுத்துவதற்கும் பிரதமர் மோடி கட்டுப்பாடு விதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வருகிற 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டு எழுவதை பிரதமர் மோடி விரும்பவில்லை என்றும், ஊழல் இல்லாத அரசு என்ற நற்பெயரை மக்கள் மத்தியில் பெறவேண்டும் என மோடி விரும்புவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

.

மூலக்கதை