உ.பி ரயில் விபத்திற்கு அலட்சியமே காரணம்..! : பராமரிப்பு பணி குறித்து முன்கூட்டியே தகவல் தெரிவிக்காத அதிகாரிகள்

தினகரன்  தினகரன்

முசாபர்நகர்: ரயில் தண்டவாளத்தில் நடைபெற்ற பணிகள் குறித்து முன் அறிவிப்பு செய்யாததே உத்திரப்பிரதேச ரயில் விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. ஒடிசா மாநிலம் பூரியில் இருந்து ஹரித்துவார் சென்ற உத்கல் விரைவு ரயில், முசாபர் நகர் மாவட்டம் காதவுலி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.  அப்போது அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில்  14 ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி உருக்குலைந்ததில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 74-க்கும் மேற்பட்வர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரயில்வே ஊழியர்களின் அலட்சியமே இந்த கோர விபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது. விபத்து ஏற்பட்ட இடத்தில் படந்த சில நாட்களாக தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இதனால் அவ்வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் 10 முதல் 15 கி.மீ வேகத்தில் தான் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் இந்த பணி குறித்து முறையான அறிவிப்பு குறிப்பிட்ட ரயில் ஓட்டுநருக்கு சொல்லப்படவில்லை என தெரிகிறது. இதனால் விரைவு ரயில் பராமரிப்பு பணி நடந்த இடத்தில் 100 கி.மீ வேகத்தில் வந்ததால் இந்த விபத்து நேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்து குறித்து உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவி்டப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உ.பி முதல்வர் எச்சரித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசும், உத்திரப்பிரதேச அரசும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என கூறியுள்ளார். உயிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சத்து 50 ஆயிரமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50,000-ம், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25,000-ம் நிவாரணம் வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை