உ.பி முசாபர்நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு 23 பேர் பலி

தினகரன்  தினகரன்

முசாபர்நகர்: உத்தரப் பிரதேசம் முசாபர்நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று மாலை தடம் புரண்டதில்,23 பயணிகள் பலியாயினர். 60க்கும்  மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர்.  ஒடிசா மாநிலம் பூரியிலிருந்து, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாருக்கு செல்லும் உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று மாலை 5.45 மணியளவில்,  உத்தரப் பிரதேசம் முசாபர்நகர் அருகேயுள்ள காதவுலி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது.  அப்போது அந்த ரயில் திடீரென தடம் புரண்டது. இதில்  14 ரயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி, தண்டவாளத்துக்கு அருகேயுள்ள ஒரு வீட்டின் மீது சாய்ந்து கிடந்தது. இந்த விபத்தில் 12 பயணிகள்  பலியாயினர்.  50க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் ்அடைந்தனர். பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மீட்பு பணிகளை ரயில்வே அமைச்சர்  சுரேஷ் பிரபுவும் கண்காணித்து வருகிறார். சம்பவ இடத்துக்கு ரயில்வே துறையின் மருத்துவரயில் பெட்டிகளும் அனுப்பப்பட்டுள்ளன. ரயில்வேத்துறை இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளார். ரயில்  விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். விபத்துக்கு ரயில்வே ஊழியர்கள் காரணம் என்றால் கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுரேஷ் பிரபு கூறியுள்ளார். மீட்பு பணியை மேற்கொள்ள காஜியாபாத்திலிருந்து, தேசிய பேரிடர் மீட்பு படை குழுவினர் மோப்ப நாய்களுடன் விரைந்துள்ளனர். இந்த விபத்து  காரணமாக வடக்கு ரயில்வேயில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கும் எனத் தெரிகிறது.  இந்த ரயில் விபத்தில் பலியானவர்களின்  குடும்பத்தினருக்கு 5 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்  அறிவித்துள்ளார். உத்கல் ரயில் விபத்து மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை