அஹமது வெற்றியை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் வழக்கு

தினமலர்  தினமலர்
அஹமது வெற்றியை எதிர்த்து பா.ஜ., வேட்பாளர் வழக்கு

ஆமதாபாத்: குஜராத்தில், சமீபத்தில் நடந்த ராஜ்யசபா தேர்தலில், காங்., வேட்பாளர் அஹமது படேல், வெற்றி பெற்றதை எதிர்த்து, பா.ஜ., வேட்பாளர், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

குஜராத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த, விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு, சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில், பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் வெற்றி பெற்றனர்.

மூன்றாவது இடத்துக்கு நடந்த தேர்தலில், காங்., தலைவர் சோனியாவின், அரசியல் ஆலோசகர் அஹமது படேல், வெற்றி பெற்றதாக, பலத்த சர்ச்சைகளுக்கு இடையே அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, வெற்றியை பறிகொடுத்த, பல்வந்த்சிங் ராஜ்புத், காங்., வேட்பாளர் வெற்றியை எதிர்த்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ராஜ்புத்திற்கு ஆதரவாக, காங்., அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் போட்ட ஓட்டுகள் செல்லாதென, தேர்தல் கமிஷன் அறிவித்தது; அது, தவறு என, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ராஜ்புத் கூறியுள்ளார்.

இந்த வழக்கு, நாளை விசாரணைக்கு வருகிறது. பா.ஜ.,வில் சேர்வதற்கு முன், சட்டசபையில், காங்., கொறடாவாக இருந்தவர், ராஜ்புத்.

மூலக்கதை