அமெரிக்க நிறுவனங்களின் தொழில்நுட்பங்களை சீனா திருடுவது பற்றி விசாரணை: டிரம்ப் உத்தரவால் அதிரடி

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : அமெரிக்க கம்பெனிகளின் தொழில்நுட்பங்கள், அறிவுசார் காப்புரிமை போன்றவற்றை சீனா திருடுவது பற்றி அமெரிக்கா அதிரடி விசாரணையை தொடங்கியுள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நட்பு நாடாக சீனா உள்ளது. இருநாடுகளுக்கும் இடையே ஆண்டுக்கு பல லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடக்கிறது. சீனாவில் அமெரிக்காவை சேர்ந்த ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. ஆனால், இந்த நிறுவனங்களின் செயல்பாட்டை எழுதப்படாத சட்டங்கள், விதிமுறைகளின் மூலம் சீனா முடக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தனது நாட்டில் வெற்றிகரமாக செயல்படும் அமெரிக்க நிறுவனங்களில் திட்டமிட்டே மறைமுகமாக தனது நாட்டு முதலீட்டை நுழைத்து, பின்னர், அந்த நிறுவனத்தையே அபகரிப்பது போன்ற செயல்களிலும் சீனா ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. அதோடு, கம்யூட்டர்களில் ரகசியமாக நுழைந்து அமெரிக்க நிறுவனங்களின் ரகசியங்களை அறிந்து கொள்வது, அதன் தொழில்நுட்பங்கள், அறிவுசார் காப்புரிமைகளை திருடுவது போன்ற சட்ட விரோத செயல்களிலும் சீனா ஈடுபடுகிறது. இதனால், தகவல் மற்றும் தொழில்நுட்பங்கள் திருட்டு, திட்டமிட்ட முட்டுக்கட்டைகள் மூலமாக அமெரிக்க நிறுவனங்களின் வளர்ச்சி தடுக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இது பற்றி விசாரணை நடத்தும்படி அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைதிசருக்கு டிரம்ப் சமீபத்தில் உத்தரவிட்டார். அதன்படி, தனது விசாரணையை ராபர்ட் தொடங்கியுள்ளார். அதில், சீனாவில் முறைகேடுகள் வெளியாகும் பட்சத்தில் இருநாட்டு வர்த்தக உறவில் விரிசல் ஏற்படும் என்று கருதப்படுகிறது.

மூலக்கதை