ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட திட்டம்

தினமலர்  தினமலர்
ரூ.5,912 கோடியில் மேகதாது அணை கட்ட திட்டம்


மேகதாதுவில், காவிரி யின் குறுக்கே, 5,912 கோடி ரூபாய் செலவில், அணை கட்ட, கர்நாடகா அரசு திட்டமிட்டுள்ளது. அணை கட்டி முடிக்கப்பட்டால், காவிரி காணாமல் போவதுடன், மக்கள் உணவுக்கும், குடிநீருக்கும் அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலை ஏற்படும்.மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் காவிரியாறு, கர்நாடகாவில், 320 கி.மீ., தமிழக - கர்நாடகா எல்லையில், 64 கி.மீ., தமிழகத்தில், 416 கி.மீ., பாய்ந்து, கடலில் கலக்கிறது.கர்நாடகாவில், காவிரி, துணையாறுகளின் குறுக்கே, கபினி, கே.ஆர்.எஸ்., ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட பெரிய அணைகளும், ஐந்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகளும் கட்டப்பட்டுள்ளன.இறுதி தீர்ப்புஇந்த அணைகளில், குறைந்த பட்சம், 120 டி.எம்.சி., நீர், சேமிக்க முடியும். காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு படி, கர்நாடகா, ஆண்டுதோறும், தமிழகத்திற்கு, 192 டி.எம்.சி., நீர், விடுவிக்க வேண்டும்.ஆனால், கர்நாடகாவின் நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை குறையும் பட்சத்தில், தங்கள் மாநில பாசன பகுதிகளுக்கு திறந்தது போக, உபரி நீரை மட்டுமே, தமிழகத்திற்கு வழங்குகிறது.தமிழகத்தில், காவிரியின் குறுக்கே, 93.47 டி.எம்.சி., மொத்த கொள்ளளவுள்ள, மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. தமிழகத்தின், 18 மாவட்டங்களின் குடிநீர் தேவையையும், காவிரியே பூர்த்தி செய்கிறது. டெல்டா மாவட்ட பாசனத்திற்கும், குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், ஓராண்டுக்கு, 200 டி.எம்.சி.,க்கு மேல், நீர் தேவை.ஆனால், கடந்த, 2016-17ல், கர்நாடகா, 67 டி.எம்.சி., நீரை மட்டுமே, தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இதனால், டெல்டாவில், 15 லட்சம் ஏக்கரில், குறுவை, சம்பா சாகுபடி பாதித்தது. நடப்பாண்டிலும், குறுவை, பாதித்த நிலையில், சம்பா சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.கபினி, மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளில் இருந்து, தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணைக்கு, கர்நாடகா தண்ணீர் வழங்குகிறது. இந்நிலையில், கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளில் திறக்கப்படும் நீரை சேமித்து, தங்கள் மாநில பாசன பகுதிகளுக்கு திருப்ப, கர்நாடகா திட்டமிட்டுள்ளது.இதற்காக, கனகபுரா தாலுகா, மேகதாது என்ற இடத்தில், 5,912 கோடி ரூபாய் செலவில், 40 டி.எம்.சி., நீர் கொள்ளளவு, 400 மெகாவாட் நீர்மின் நிலையத்துடன் கூடிய அணையை கட்ட, கர்நாடகா திட்டமிட்டுள்ளது.இரு ஆண்டுகளுக்கு முன், 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, ஆய்வு மற்றும் திட்ட மதிப்பீடு செய்யும் பணிகளையும் கர்நாடகா மேற்கொண்டது.விரிவாக்கம்புதிய அணையில் தேக்கப்படும் நீரை, பாசனத்திற்கு பயன்படுத்துவதற்காக, சுற்றுப்பகுதியிலுள்ள மைசூரு, சாம்ராஜ்நகர், தும்கூர் மாவட்டங்களில், 1,885 கோடி ரூபாய் செலவில், 490 ஏரி, குளங்களை சீரமைத்து, கூடுதல் நீரை சேமிக்கும் வகையில், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளது.மேகதாதுவில் அணை கட்டும் பட்சத்தில், கபினி, கே.ஆர்.எஸ்., அணையில் திறக்கப்படும் நீர், நேரடியாக புதிய அணைக்கு வரும். அந்த அணையில் இருந்தே, தமிழகத்திற்கு நீர் திறக்கப்படும்.மேலும், குடிநீர், பாசன தேவையை காரணம் காட்டி, குறைந்தபட்சம், 20 டி.எம்.சி., நீரை தேக்கி வைத்து, அதன் பின், தமிழ கத்திற்கு நீர் திறக்கும் நிலை ஏற்படும். இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, தாமதமாவது மட்டுமின்றி, வறட்சியான ஆண்டுகளில், நீர்வரத்தே இருக்காது.உற்பத்தி பாதிப்புமேட்டூர் அணை நீரின் மூலம், டெல்டா மாவட்டங்களில், ஆண்டுதோறும், 17.10 லட்சம் ஏக்கரில், 34.20 லட்சம் டன், நெல் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம், ஆண்டுதோறும் தமிழக மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியும்.மேகதாதுவில் அணை கட்டாத நிலையிலேயே, டெல்டாவில், ஐந்து ஆண்டு களாக, குறுவை சாகுபடியும், கடந்த ஆண்டு சம்பா சாகுபடியும் பொய்த்ததால், தமிழகத்தின் உணவு உற்பத்தி பாதித்துள்ளது.கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேட்டூர் அணையில் இருந்து, காவிரியாற்றில் தினமும் குறைந்தபட்சம், 1,000 கன அடி நீர் திறக்க வேண்டும். இவ்வாறு, ஆண்டு முழுவதும் நீர்திறக்க, குறைந்த பட்சம், 30 டி.எம்.சி., நீர் தேவை.குடிநீரும் சந்தேகம்மேகதாதுவில் அணை கட்டினால், நீர்பிடிப்பு பகுதியில் பருவமழை குறையும் ஆண்டுகளில், குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான தண்ணீர் கூட, மேட்டூர் அணைக்கு வருவது சந்தேகமே.மேகதாதுவில், தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் அணை கட்டலாம் என, இரு நாட்களுக்கு முன், உச்சநீதிமன்றம் கூறியுள்ளது, கர்நாடகாவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.புதிய அணை கட்டும் பட்சத்தில், தமிழகத்தில் காவிரியாறு காணாமல் போகும்; டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாக மாறுவதுடன், பல லட்சம் விவசாய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கும். தமிழகம் உணவுக்கும், குடிநீருக்குமே அண்டை மாநிலங்களில் கையேந்தும் அபாயம் ஏற்படும்.

- நமது சிறப்பு நிருபர் -

மூலக்கதை