எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம்: மம்தா ஆவேசம்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் லோக்சபா தேர்தலில் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்கலாம் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல்  அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அவர் தொலைகாட்சி ஒன்றில் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது மம்தா பானர்ஜி பேசுகையில், நாட்டில் தற்போது மிகப் பெரிய சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. எதிர்கட்சிகள் ஓரணியில் திரண்டால் வருகிற 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதற்கு ஒரு முடிவு கட்டலாம். மத்தியில் ஆட்சியில் இருக்கும் சூப்பர் சர்வாதிகாரத்தை குறித்து யாராவது வாயை திறந்தால் அவ்வளவுதான். அவர்கள் மீது அமலாக்கத்துறை அல்லது சிபிஐ அல்லது வருமானவரித்துறையினர் ரெய்டு பாயும். அவர்களது வீடுகளில் ரெய்டுகள் நடத்தப்படும். இதனால் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். ஒவ்வொருவரும் அச்சத்தில் இருந்தால், எதிர்கட்சிகள் எப்படி சக்தி மிக்கதாக மாற முடியும்? நான் எப்போதும் மத்திய அரசை தாக்கி பேசுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.ஏனெனில் எனக்கு அச்சம் கிடையாது. நான் அடி மட்டத்தில் இருந்து அரசியலில் வெற்றி பெற்றவள். எனவே வாழ்நாள் முழுவதும் போராடி வந்திருக்கிறேன்.  எனவே நான் இயல்பிலேயே ஒரு போராளி. இதை மற்றவர்களால் சகித்துக் கொள்ள முடியாது. நாம் ஒற்றுமையாக இணைந்து ஒரு அணியை கூட்டாதவரையில் 2019ல் மத்தியில் ஒரு மாற்றத்தை உருவாக்க முடியாது. இன்னும் 6 மாதத்தில் இதற்கான தெளிவு கிடைத்து விடும் என்றார்.

மூலக்கதை