இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ஹோமை வியாரவல்லா... சில நினைவுகள்..!

விகடன்  விகடன்
இந்தியாவின் முதல் பெண் புகைப்படக்காரர் ஹோமை வியாரவல்லா... சில நினைவுகள்..!

இந்தியாவின் முதல் பெண் புகைப்படக் கலைஞர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர், ஹோமை வியாரவல்லா (Homai Vyarawalla). குஜராத் மாநிலம் வதோதராவில், 1913-ம் ஆண்டு பிறந்தவர். பாம்பே பல்கலைக்கழகத்தில் கல்லூரிப் படிப்பை முடித்தார். தனது வாழ்க்கை முழுவதும் காந்திய கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த இவர், 29 வயதில் குடும்பத்துடன் டெல்லியில் குடியேறினார். 

டெல்லிக்கு வந்த சில வருடங்களிலேயே அன்றைய மிகப்பெரிய தலைவர்களின் தனிப்பட்ட புகைப்படக்காரராகவும், பத்திரிகைப் புகைப்படக்காரராகவும் வளர்ந்தார்.

இவர் படம் பிடித்த கறுப்பு வெள்ளை புகைப்படங்கள், பல்வேறு பத்திரிகைகளின் அட்டைகளை அலங்கரித்தன. கணவரின் இறப்புக்குப் பிறகு 1973-ம் ஆண்டு மீண்டும் வதோதராவுக்கே சென்றுவிட்டார்

ஜவஹர்லால் நேருவைப் புகைப்படம் எடுப்பதென்றாலே மிகவும் உற்சாகமாகிவிடுவார். இவர் கேமராவில் அதிக முறை எடுக்கப்பட்ட தலைவர்களில் முதல் இடம், நேருவுக்குதான்.

இன்று பல்வேறு இடங்களில் கம்பீரமாக நிற்கும் நேருவின் புகைப்படங்களில் பலவற்றுக்குச் சொந்தக்காரர், ஹோமை வியாரவல்லா.

இவரால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பெரும்பாலும் 'Dalda 13' என்னும் பெயரிலேயே வெளிவந்திருக்கும். ஏனெனில், இவர் பிறந்த வருடம் 1913. கணவரை முதன்முதலில் சந்தித்தபோது இவரின் வயது 13. இவரது முதல் காரின் நம்பர் பிளேட் 'DLD 13'.

கணவரின் இறப்புக்குப் பின்னர் இவரது வாழ்க்கையில் மாற்றங்கள் உண்டாகின. அல்லது உண்டாக்கிக்கொண்டார். புதிதாக புகைப்படம் எடுக்க வந்தவர்களின் நடவடிக்கையும் புகைப்படம் எடுக்கும் விதமும் ஏனோ இவருக்குப் பிடிக்கவில்லை. அதனால், புகைப்படம் எடுப்பதையே நிறுத்திவிட்டார்.

இவருக்கு எல்லாமுமாக இருந்த ஒரே மகனான ஃபாரூக் (Farooq), 1989-ம் ஆண்டு புற்றுநோயால் இறந்துவிட்டார். அந்தச் சோகம் அவரை அதிகம் பாதித்தது. மேலும் தனிமையானார். 2011-ம் ஆண்டு, தனது 98-வது வயதில் வாழ்நாள் சாதனைக்காக 'பத்ம விபூஷன்' விருதைப் பெற்றார். 

2012 ஜனவரி 15-ம் தேதி இந்தியாவின் முதல் பெண் கேமரா, தனது ஒளியை நிறுத்தி, இயற்கையில் கலந்தது.

மூலக்கதை