உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது 42 மாணவ, மாணவிகள் தப்பினர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
உளுந்தூர்பேட்டை அருகே இன்று அதிகாலை ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது 42 மாணவ, மாணவிகள் தப்பினர்

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து எரிந்து ரூ. 15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாயின. இதில் அதிர்ஷ்டவசமாக 42 கல்லூரி மாணவ, மாணவிகள் உயிர் தப்பினர்.

விபத்தால் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருச்சியில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை சென்னை நோக்கி புறப்பட்டது.

திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் 42 பேர் இதில் பயணம் செய்தனர்.   மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த முருகேசன்(42) பேருந்தை ஓட்டிச்சென்றார்.

இன்று அதிகாலை விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த நகர் டோல்கேட் அருகில் சென்றபோது பேருந்தின் பின்பகுதியில் இருந்து திடீரென புகை வந்ததை அறிந்த டிரைவர் உடனடியாக பேருந்தை ரோட்டின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அதற்குள் தீ மளமளவென எரிய ஆரம்பித்ததால் பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த மாணவ, மாணவிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓடி உயிர் தப்பினர்.

சிறிதுநேரத்தில் தீ வேகமாக பரவி பேருந்து முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அவ்வழியே வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன.

தகவல் அறிந்ததும் உளுந்தூர்பேட்டை மற்றும் மங்கலம்பேட்டை பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் சுமார் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பேருந்து முழுவதும் எரிந்து எலும்புக் கூடானது.

மேலும் பேருந்தில் வந்த கல்லூரி மாணவ, மாணவிகளின் லேப்டாப், செல்போன்கள், உடமைகள் என ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகி இருக்கலாம் என தெரிகிறது.

இந்த சம்பவத்தால் உளுந்தூர்பேட்டை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

.

மூலக்கதை