சேலத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சல் ஒரே நாளில் 3 குழந்தை பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
சேலத்தில் தீவிரமாக பரவும் காய்ச்சல் ஒரே நாளில் 3 குழந்தை பலி

சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில் நேற்றிரவு அடுத்தடுத்து 3 குழந்தைகள் காய்ச்சலால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் நாள்தோறும் அதிகரித்து வருகிறது.

சேலம் மாவட் டத்திலும் இடைப்பாடி, ஓமலூர், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதேபோல் மாநகர் முழுவதும் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 12க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளாகும்.



நேற்று முன்தினம் கூட ஓமலூரைச் சேர்ந்த 2 குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆயிரக்கணக்கானோர் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 3 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் கருப்பூர் வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் இடும்பன். இவரது மகன் ஷர்மிலன் (9) அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தான்.

கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஷர்மிலன், நேற்று முன்தினம் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

அங்கு சிறுவனுக்கு டெங்கு பாதிப்புக்கான அறிகுறி இருந்ததையடுத்து, பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி ஷர்மிலன் பரிதாபமாக உயிரிழந்தான். இதேபோல் காய்ச்சலுக்காக அனுமதிக்கபட்டிருந்த சேலத்தை சேர்ந்த மேலும் 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘உயிரிழந்த ஷர்மிலனுக்கு மட்டும் டெங்குக்கான அறிகுறி இருந்தது. மற்ற இருவரில், ஒருவன் நிமோனியாவாலும், மற்றொருவன் மூளைக்காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.

அரசு மருத்துவமனையில் தற்போது 265 குழந்தைகள் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் டெங்கு கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை,’’ என்றனர்.


.

மூலக்கதை