‘ஒயிட்வாஷ்’ செய்த இந்திய அணி மிகப்பெரிய பெருமைகளுக்குத் தகுதியுடையதே: மைக்கேல் கிளார்க்

தி இந்து  தி இந்து
‘ஒயிட்வாஷ்’ செய்த இந்திய அணி மிகப்பெரிய பெருமைகளுக்குத் தகுதியுடையதே: மைக்கேல் கிளார்க்

விராட் கோலியிடம் நிறைய ஆஸ்திரேலிய குணாம்சங்கள் இருப்பதாக அன்று கூறிய மைக்கேல் கிளார்க், இலங்கையை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணிக்கு நிறைய பெருமைகளைச் சேர்க்க வேண்டிய தகுதி உள்ளது என்று புகழ்ந்துள்ளார்.

மும்பையில் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கிளார்க், “வெளிநாட்டில் எந்த ஒரு வெற்றியும் நல்ல வெற்றிதான். யாருக்கு எதிராக ஆடினாலும் வெற்றி வெற்றிதான். இது டெஸ்ட் கிரிக்கெட், யாருக்கு எதிராக ஆடுகிறோம் என்பது முக்கியமல்ல. டெஸ்ட் கிரிக்கெட்டே கடினம்தான். எனவே 3-0 என்று இலங்கையை வீழ்த்திய இந்திய அணி நிறைய பெருமைகளுக்குத் தகுதியானதே.

அனைத்து அணிகளும் வெளிநாட்டில் வெல்ல தடுமாறுகின்றன என்பதே உண்மை. இது ஒரு அணிக்கு மட்டும் உரித்தானதல்ல. ஆனால் இந்தியாவுக்கு மிகவும் கடினமான தொடர்கள் காத்திருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

அதனால்தான் நான் கூறுகிறேன் எந்த அணி சீராக அயல்நாட்டில் வெல்கிறதோ அந்த அணிதான் உலகின் சிறந்த அணி என்று. அது அவ்வளவு சுலபமல்ல. என்னுடைய வாழ்நாள் முழுதும் அயல்நாட்டு மண்ணில் வெற்றி பெறுவது என்பது அந்த சூழ்நிலையை தன்வயப்படுத்துவது என்பது சவாலாகவே இருந்துள்ளது.

அடுத்த 12 மாதங்களில் இந்தியாவுக்கு சவால் அளிக்கும் போட்டிகள் நிறைய வருகின்றன. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து தொடர்கள் உள்ளன. ஆஸ்திரேலியா தொடரும் உள்ளது. இங்கெல்லாம் வென்றால் நம்பர் 1 நிலையில் நீண்ட காலம் இந்திய அணி நீடிக்கும்” என்றார்.

மூலக்கதை