போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் ...

TAMIL WEBDUNIA  TAMIL WEBDUNIA
போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் ...

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து வந்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அவரது நினைவிடமாக அரசு சார்பில் மாற்றப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் அறிவித்தார். இதனையடுத்து அதற்கான பணிகள் இன்று தொடங்கியுள்ளது.


    ஜெயலலிதா இறந்த பின்னர் அவரது இல்லத்தை நினைவிடமாக மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் அவரது தோழி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அங்கு வசித்து வந்தனர். சசிகலாவும் சிறைக்கு செல்ல நேரிட்டதால் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் போயஸ் கார்டன் இல்லத்தை பராமரித்து வந்தார்.   இந்நிலையில் நேற்றுமுன் தினம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்தார்.

இதனையடுத்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் தங்கள் தரப்பு எதிர்ப்பை தெரிவித்தனர்.   இதனையடுத்து தீபக் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் வீடு எனக்கும் எனது சகோதரி தீபாவுக்கும் சொந்தமானது.

அதனை எங்கள் அனுமதியின்றி நினைவிடமாக மாற்ற முடியாது.   எங்களின் ஒப்புதல் இல்லாமல் நினைவிடமாக மாற்ற நினைப்பது சட்டப்படி குற்றம். அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அதே நேரத்தில் நினைவிடமாக்குவதற்கு முன் சட்டப்படி எங்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.   இதனையடுத்து ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை உரிமை கொண்டாடி தீபா, தீபக் உள்ளிட்டோர் வரலாம் என்பதால் அங்கு நேற்று போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது. சீருடை அணிந்த போலீசாரும், உளவுப்பிரிவு போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.   போயஸ் கார்டன் வீட்டில் இருந்த சசிகலா, தினகரன் உறவினர்களும் அங்கிருந்து நேற்று வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வந்தன.

இந்நிலையில் இன்று போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் பணிகள் ஆரம்பித்துள்ளன.

வேதா இல்லத்தை அளவிடும் பணிகளை முதற்கட்டமாக வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று தொடங்கியுள்ளனர்.

.

மூலக்கதை