இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் படகுகள் சேதம்: மீட்க முடியாமல் திரும்பிய குழு

தினகரன்  தினகரன்

இலங்கை: இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகள் சேதமடைந்திருப்பதால் அதனை மீட்க முடியாமல் இலங்கை சென்ற இந்திய குழு ஏமாற்றத்துடன் திரும்பியிருக்கிறது. கடந்த 2015ம் வருடம் ஜூன் மாதம் 3ம் தேதி முதல் இலங்கை கடல்பகுதியில் எல்லை தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 42 விசைப்படகுகளை இலங்கை அரசானது பறிமுதல் செய்து அந்நாட்டில் உள்ள காங்கேசன் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்ததன் எதரொலியாகவும், மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் முக்கிய கோரிக்கைகளை முன் வைத்தது. இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் படகை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தின் எதிரொலியாக கடந்த ஜூலை 15 மற்றும் 17ம் தேதி ஆன இரண்டு கட்டங்களில், முதல் கட்டமாக 42 விசைப்படகுகளை விடுதலை செய்ய இலங்கையில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 17ம் தேதி தமிழக மீனவர்கள் 4 பேர் உட்பட 7 பேர் கொண்ட குழு இலங்கைக்கு சென்றுள்ளனர். இலங்கை சென்றுள்ள இந்த மீனவர் குழுவானது, இன்று காலை இலங்கையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகளை பார்வையிட சென்றிருந்தனர். பார்வையிட்ட மீனவர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமே மிஞ்சியது. 42 விசைப்படகுகளில் 30க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் சேதமடைந்து, அதில் உள்ள இன்ஜின்கள் எதுவும் பயன்படுத்தாத நிலையில் இருக்கின்றன. இதனை பார்வையிட்ட மீனவர் குழுவினர், அங்குள்ள பத்திரிக்கையாளர்களிடம் முக்கிய கருத்துக்களை முன் வைத்துள்ளனர். அதில், இலங்கை அரசு விடுவித்த 42 படகுகளையும் நாங்கள் பார்வையிட தான் வந்தோம். ஆனால் அவை முற்றிலும் சேதமடைந்துள்ளது. இவற்றை எப்படி நாங்கள் இந்தியாவிற்கு கொண்டு செல்ல போகின்றோம்? இதனை சரி செய்ய பெரிய தொகை செலவாகும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் என்ன செய்ய போகின்றது என்ற கேள்வியையும் அவர்கள் முன் வைத்துள்ளனர்.

மூலக்கதை