சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி - ரோகன் போபண்ணா ஜோடியும் முன்னேற்றம்

தி இந்து  தி இந்து
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் சானியா ஜோடி  ரோகன் போபண்ணா ஜோடியும் முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் பெங் ஷூய் ஜோடி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி கால் இறுதியில் கால்பதித்தது.

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 6-3, 7-5 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் ஜூயன் மார்ட்டின் டெல்போர்டோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தியம் 7-6 (7-4), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் பிரான்சின் அட்ரியன் மனாரினோவையும், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 7-6 (7-4), 7-5 என்ற செட் கணக்கில் பிரான்செஸ் தியாபோவையும் வீழ்த்தினர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ருமேனியாவின் சிமோனா ஹாலப் 6-4, 6-3 என்ற நேர் செட்டில் லத்வியாவின் அனஸ்டசிஜா செவஸ்டோவாவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் டென்மார்க்கின் கரோவின் வோஸ்னியாக்கி 6-4, 6-2 என்ற நேர் செட்டில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்தியையும், ஸ்பெயினின் கார்பைன் முகுருசா 6-4, 3-6, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் மேடிசன் கெய்ஸையும், இங்கிலாந்தின் ஜோகன்னா ஹோன்டா 6-3, 6-4 என்ற நேர் செட்டில் சுலோவேக்கியாவின் டொமினிகா சிபுல்கோவாவையும் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தனர்.

மகளிர் இரட்டையர் பிரிவு கால் இறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, சீனாவின் பெங் ஷூய் ஜோடி 6-3, 6-7, 10-3 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் இரினா கமிலியா பெகு, ராலூகா ஒலரு ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது. ஆடவர் இரட்டையர் பிரிவில் ரோகன் போபண்ணா, குரோஷியாவின் இவான் டுடிக் ஜோடி 5-7, 7-5, 10- 8 என்ற செட் கணக்கில் கொலம்பியாவின் ஜூயன் செபஸ்டியன் கபால், இத்தாலியின் பேபியோ போக்னி ஜோடியை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது. - ஐஏஎன்எஸ்

மூலக்கதை