2022க்குள் தீவிரவாதம் இல்லாத புதிய இந்தியா பிறக்கும்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி

தினகரன்  தினகரன்

லக்னோ: காஷ்மீர் பிரிவினைவாத விவகாரம், தீவிரவாதம் மற்றும் நக்சல் தாக்குதல்களுக்கு 2022க்குள் தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த \'புதிய இந்தியா\' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றிய அவர், தீவிரவாதம், நக்சலிசம் மற்றும் காஷ்மீர் விவகாரம் உள்ளிட்டவற்றால் ஏராளமான பிரச்சனைகள் இருப்பதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், உறுதியேற்போம் செயல்படுவோம் என்பதே நமது இலக்காக இருக்க வேண்டும் என்றார். இதே போன்று இந்தியாவை தூய்மை நாடாகவும், ஏழ்மை மற்றும் ஊழலற்ற நாடாகவும் மாற்ற வேண்டும். பிரிவினைவாதம், சாதிய வேறுபாடுகள், தீவிரவாதம் இல்லாத நாட்டை உருவாக்குவதே நமது கடமை. வெள்ளையனே வெளியேறு இயக்கத்திற்கு 1942ல் உறுதியேற்று 1947ம் ஆண்டு நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது. இதே போன்று நம்மால் முடியாதா 2017ல் புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்று 2022ல் அதனை நிறைவேற்றுவோம் என்றார். இதே போன்று வடகிழக்கு மாநிலங்களில் 5 தலைமுறைகளாக நீடிக்கும் உள்நாட்டு கலவரங்களுக்கும் தீர்வு எட்டப்படும். பிரச்னைகளுக்கு தீர்வு காணும் இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டும், என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 75ம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்பு புதிய இந்தியாவை உருவாக்க உறுதியேற்றுள்ள பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

மூலக்கதை