'கழிப்பறை இல்லையேல் மணமகள் இல்லை' பிரச்சாரத்தால் ஹரியானாவில் சுகாதாரம் முன்னேற்றம்

தினகரன்  தினகரன்

சண்டிகர்: \'கழிப்பறை இல்லையேல் மணமகள் இல்லை\' என்கிற விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஹரியானா மாநிலத்தில் பல ஆயிரம் வீடுகளில் கழிப்பறை கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் பொது சுகாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது என ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது. மத்தியில் பாஜக அரசின் ஸ்வச் பாரத் திட்டத்துக்கு முன்பே, ஹரியானா மாநிலத்தில் \'கழிப்பறை இல்லை என்றால் மணமகள் இல்லை\' என்ற விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு கழிப்பறைகள் அதிகளவில் கட்டப்பட்டு பொது சுகாதாரம் மேம்பாடு அடைந்துள்ளதாக பத்திரிகையில் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது. வீட்டில் திருமண வயதில் மகன் இருந்தால் அங்கு கழிப்பறை வசதி இருந்தால் மட்டுமே பெண் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஹரியானா மாநிலத்தில் இந்தியாவிலேயே குறைந்த அளவுக்கு 1000க்கு 879 பெண்கள் தான் இருக்கின்றனர். இதனால் அங்கு ஆண்களுக்கு திருமணம் செய்து கொள்ள பெண் கிடைப்பது மிகவும் சிரமமான விஷயமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் கழிப்பறை இருந்தால் தான் பெண் கிடைக்கும் என பிரச்சாரம் செய்யப்பட்டது.இந்த பிரச்சாரத்தால் 21% கழிப்பறைகள் கட்டுவது அதிகரித்தது என்று கூறும் அந்த அறிக்கை, இந்த 21% முன்னேற்றமும் யார் வீட்டில் திருமணத்துக்காக ஆண்கள் இருக்கின்றனரோ அவர்கள் வீட்டில் தான் இந்த பிரச்சாரம் பலித்தது என்றும் விளக்கியுள்ளனர். இந்த பிரச்சாரத்தால் 2005 - 2009ஆம் ஆண்டுகளில் ஹரியானாவில் மொத்தம் 14, 42,000 கழிப்பறைகள் கட்டப்பட்டதாகவும் அதில் 9,50,000 கழிப்பறைகள் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ள குடும்பங்களிலும் 4,70,000 கழிப்பறைகள் வறுமைக்கோட்டுக்கு கீழேயுள்ள குடும்பங்களிலும் கட்டப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, திருமணத்துக்கு தயாராகும் ஆண்கள் சிலர் தங்கள் வீட்டில் எதிர்கால மனைவியை ஈர்க்க ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்களை வாங்குவதில் முதலீடு செய்வது போல, ஹரியானா ஆண்கள் எதிர்கால மனைவிக்கு கழிப்பறை கட்டுவதில் முதலீடு செய்து மொத்தக் குடும்பத்தின் சுகாதாரத்தையும் மேம்படுத்தினர் என்கின்றனர் ஆய்வாளார்கள்.

மூலக்கதை