கூடுதல் கல்வி கட்டணத்தை திருப்பி தராவிட்டால் 449 தனியார் பள்ளிகளை அரசே ஏற்கும்: முதல்வர் கெஜ்ரிவால் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்ததற்காக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள 449 தனியார் பள்ளிகள் அத்தொகையை திருப்பி தர மறுத்தால், அதை அரசே ஏற்று நடத்தும் என முதல்வர் கெஜ்ரிவால் எச்சரித்துள்ளார். மத்திய அரசின்  ஆறாவது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தர வேண்டும் என்ற காரணத்தை காட்டி கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த கடந்த 2011ம் ஆண்டு நீதிபதி அனில் தேவ் சிங் தலைமையில் குழு ஒன்றை உயர்நீதிமன்றம் அமைத்தது. இக்குழு 1,108 தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்தியது. அதில் 531 பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்ததுள்ளது தெரியவந்தது. அதை 9 சதவீத வட்டியுடன் மாணவர்களின் பெற்றோருக்கு திருப்பி தர வேண்டும் என பரிந்துரைத்தது. அத்துடன் 247 பள்ளிகளில் சிறப்பு ஆய்வு நடத்தவும் பரிந்துரைத்து.  வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணத்தை பெற்றோரிடம் திருப்பி தர வேண்டும் என கல்வி இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியது. அதில் ஆய்வுக் குழு பரிந்துரைப்படி செயல்பட தவறினால், டெல்லி பள்ளிக் கல்விச் சட்ட விதிகள் 1973ன்படி பள்ளியின் அங்கீகாரம் ரத்தாகும் அல்லது அதன் நிர்வாகம் அரசின்கீழ் வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. நீதிபதி அனில் தேவ் சிங் பரிந்துரைகளுக்கு தடை கோரி  அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பு வழக்குத் தொடர்ந்தது. ஆனால், இதற்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்து மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் தீர்ப்பளித்தது. கெஜ்ரிவால் பேட்டி: இந்த பின்னணியில், முதல்வர் கெஜ்ரிவால் செய்தியாளர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அவர் கூறுகையில், ‘‘நீதிபதி அனில் தேவ் சிங் குழுவால் கூடுதல் கட்டணம் வசூலித்தாக கண்டறியப்பட்டுள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வட்டியுடன், கூடுதலாக பெற்ற கட்டணத்தை திருப்பி தர வேண்டும். தவறினால் அவற்றை அரசே எடுத்து நடத்தும். கூடுதல் கட்டணம் வசூலித்த ஒரு பள்ளியிடம் உபரியாக ₹15 கோடியும், மற்றொரு பள்ளியிடம் ₹5 கோடியும் உள்ளது. அவற்றுக்கு இறுதி எச்சரிக்கை கொடுக்க விரும்புகிறோம். இப்படிதான் அரசின் நடவடிக்கை இருக்கும்’’ என்றார். துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில், ‘‘மாணவர்களிடம் கொள்ளையடிக்க பள்ளிகளை அனுமதிக்க முடியாது. இந்த பள்ளிகளுக்கு நான்கு நாட்களுக்கு முன்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அனில் தேவ் சிங் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தாவிட்டால், கடைசி நடவடிக்கையாக அரசு நடவடிக்கை எடுக்கும்’’ என்றார்.

மூலக்கதை