அங்கன்வாடி ஊழியர்களுக்கு இருமடங்கு ஊதிய உயர்வு: துணைநிலை ஆளுநர் ஒப்புதல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய தொகையை இருமடங்காக உயர்த்தும் கோரிக்கைக்கு கவர்னர் சம்மதம் அளித்துள்லார். டெல்லியில் 11,000 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. அதில் தலா ஒரு ஊழியர் மற்றும் உதவியாளர் உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் அலவன்ஸ்களை இரு மடங்காக உயர்த்த வேண்டும் என்று மாநில அமைச்சரவையில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு ஒப்புதல் கிடைக்கவே, துணைநிலை ஆளுநர் ஒப்புதலுக்காக மூன்று வாரத்துக்கு முன்பு அதுசார்ந்த கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய தொகையை ₹5000த்திலிருந்து ₹10,170 ஆகவும், உதவியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதிய தொகையை ₹2500லிருந்து ₹5,089 ஆகவும் உயர்த்தி வழங்க துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார். இதுகுறித்து துணை முதல்வர் சிசோடியா தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது: அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய தொகையை இரு மடங்காக உயர்த்தி வழங்க வேண்டுமென்ற மாநில அரசின் முடிவுக்கு ஆளுநர் பைஜால் அனுமதி வழங்கியுள்ளார். அவருக்கு மிக்க நன்றி. எனினும் இந்த அனுமதி பெற 26 நாட்கள் காத்திருக்க வேண்டி இருந்தது’ என்று குறிப்பிட்டிருந்தார்.

மூலக்கதை