ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கொள்ளை பயணிகள் தொடர்பு குறித்து ரயில்வே போலீசார் ஆய்வு: துப்பு கிடைக்காமல் திணறல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் 25 பேரிடம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவத்தில் பயணிகளில் யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என ரயில்வே போலீசார் ஆய்வு செய்து வருவது புலன் விசாரணையில் திருப்பம் ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இருந்து டெல்லிக்கு 15ம் தேதி மாலை புறப்பட்ட ஆகஸ்ட் கிராந்தி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை சம்பவம் நடந்தது. பயணிகளை மயக்கத்தில் ஆழ்த்தி கொள்ளை அரங்கேறியது. 25 பயணிகள் தங்களது ரொக்கம், பொருட்கள், விலையுயர்ந்த ஐபோன் என சுமார் 15 லட்ச ரூபாயை பறிகொடுத்துள்ளனர். அதையடுத்து, சம்பவத்தில் ரயில்வே ஊழியர்களும், ரயிலின் கேட்டரிங் பணியாளர்களுக்கும் தொடர்பு இருக்கக்கூடும் என பயணிகள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர். பறிகொடுத்த பெட்டிகளில் உதவியாளர்களாக இருந்த 7 பேர் மற்றும் அந்த பெட்டிகளில் துப்புரவு பணியாளர்களாக இருந்த 7 பேர் என மொத்தம் 14 பேரை ரயில்வே நிர்வாகம் பணியிலிருந்து நீக்கி அறிவித்து உள்ளது.சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசாரின் புலன் விசாரணை சூடு பிடிக்கத் தொடங்கி இருந்தாலும், துப்பு எதுவும் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.ரயில்வே போலீசுக்கு எழுந்துள்ள சந்தேகங்களும், விசாரணைகளில் இதுவரை தெரிந்துள்ள விவரங்களும் பின்வருமாறு: மும்பை-டெல்லி ராஜ்தானி ரயிலில் சமீபகாலத்தில் இதற்கு முன் நடைபெற்ற இரண்டு கொள்ளை சம்பவங்களுக்கும், இப்போது அரங்கேறிய சம்பவத்திற்கும் தொடர்பு இருக்கக்கூடும்.ஜூலை மாதம் மற்றும் அதற்கு முன் நடந்த கொள்ளை சம்பவங்களும் பரோடா மற்றும் கோட்டா ரயில் நிலையங்களுக்கு இடையில் அரங்கேறி உள்ளது. தற்போது நடைபெற்றுள்ள சம்பவமும் கோட்டாவுக்கு அருகே நடந்துள்ளது. மூன்று கொள்ளைகளிலும் பயணிகள் மயக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். எனவே, திட்டமிட்டு கொள்ளை அரங்கேறி உள்ளது. பயணிகளில் யாராவது திட்டமிட்டு செய்துள்ளனரா என்ற சந்தேகம் முளைத்துள்ளது. எனவே, ஜூலை 9ம் தேதி பயணித்தவர்களின் காலடித் தடங்களும் 15ம் தேதி பயணம் செய்தவர்கள் காலடித் தடங்களும் ஒத்து போகிறதா என டிஜிட்டல் ஆய்வுகள் செய்யப்படுகிறது. மேலும், ஒரே விலாசத்தில் இருந்து இரண்டு பயணங்களிலும் டிக்கெட் புக் செய்தவர்களும் விசாரிக்கப்பட உள்ளனர். குழுவாக பயணம் மேற்கொண்ட ஆண்கள் அல்லது பெண்கள், அவர்களது வயது உள்பட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணைக்கு அழைக்கப்பட உள்ளனர். ஒரே அடையாளத்தை வைத்து புக் செய்த பயனாளர்கள் விசாரிக்கப்படுவார்கள். சம்பவம் தொடர்பாக மும்பை, ரட்லம், கோட்டா ரயில்வே போலீஸ் மற்றும் ஊழியர்கள் ஒத்துழைப்பும் கேட்கப்பட்டு உள்ளது. விசாரணைகள் பலவிதமாக முடுக்கி விடப்பட்டு இருந்தாலும், உறுதியான துப்பு எதுவும் கிடைக்காமல் போலீசார் திண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மூலக்கதை