நில மோசடி புகாரில் எடியூரப்பா மீது வழக்கு அரசியல் பழிவாங்கும் நோக்கம் இல்லை: முதல்வர் சித்தராமையா விளக்கம்

தினகரன்  தினகரன்

பாகல்கோட்டை :  அரசுக்கு சொந்தமான நிலம் டிநோடிபிகேஷன் செய்த புகாரில் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் பழிவாங்கும் நோக்கம் எதுவும் கிடையாது என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மாநிலத்தின் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலமட்டி அணை முழுமையாக நிரம்பியதை தொடர்ந்து நேற்று நீர்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உள்பட அதிகாரிகளுடன் சென்று முதல்வர் சித்தராமையா சென்று சமர்ப்பண பூஜை செய்தார். அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், மாநிலத்தில் எனது தலைமையில் காங்கிரஸ் அரசு அமைந்தபின் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதில் முழு கவனம் செலுத்தி வருவதுடன், தொலைநோக்கு பார்வையுடன் பல திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம். மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவும் சமயத்தில் மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பாஜவை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடம் போராடி மாநிலத்திற்கு தேவையான நிவாரண உதவி பெற முயற்சிக்க வேண்டும். ஆனால் அதை விட்டு அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் மக்களின் ஆதரவை பெற வேண்டும் என்பதற்காக எங்கள் ஆட்சி மீது ஏதாவது குறைகளை கண்டுபிடித்து அதை மக்கள் முன் கொண்டு செல்லும் முயற்சியில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மாநில முதல்வராக எடியூரப்பா இருந்தபோது பெங்களூருவில் அமைக்கப்படும் சிவராம காரந்த் லே அவுட் அமைப்பதற்காக விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் 250 ஏக்கர் நிலம் டிநோடிபிகேஷன் செய்துள்ளதாக அவர் மீது ஊழல் தடுப்பு படையிடம் புகார் கொடுக்கப்பட்டது. அதை பரிசீலனை செய்த ஏசிபி அதிகாரிகள் புகாரில் உண்மையுள்ளதாக உறுதி செய்து எடியூரப்பா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கும் மாநில அரசுக்கும் எந்த சம்மந்தமுமில்லை. ஆனால் இதில் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சியை எடியூரப்பாவும், அவர் சார்ந்த பாஜ கட்சி தலைவர்களும் மேற்கொண்டு வருகிறார்கள். எடியூரப்பாவை அரசியல் ரீதியாக பழிவாங்க வேண்டிய அவசியமில்லை. அவரின் வளர்ச்சிக்கு வேறுயாரும் தடையாக இருக்க வேண்டிய அவசியமுமில்லை. அவர் சார்ந்த கட்சியில் உள்ளவர்களே போதும். இவ்வாறு முதல்வர் கூறினார்.

மூலக்கதை