போதிய ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்: சிபிஐ.க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : ‘கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இருந்தால், சிபிஐ அவரை கைது செய்ய எந்த தடையும் இல்லை’’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாக கூறி மொரிஷியசில் இருந்து சட்ட விரோதமாக கோடிக்கணக்கில் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ  வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்னை உள்ளிட்ட 14 இடங்களில் கடந்த மே 16ம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு கார்த்தி சிதம்பரத்தை நேரில் ஆஜராகும்படி சிபிஐயும், அமலாக்கத் துறையும் பலமுறை  சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதையடு்தது, அவர் வெளிநாட்டுக்கு தப்பி செல்வதை தடுப்பதற்காக அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை ஏற்ற நீதிபதிகள், மத்திய அரசின் அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்தது.    இதை எதிர்த்து சிபிஐ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. அதை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு   தடை விதித்து, விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி,  இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே எஸ்.கெஹர், நீதிபதி சந்திராசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கார்த்தி சிதம்பரம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில்,  ‘கார்த்தி சிதம்பரம் பாரம்பரியமான குடும்பத்தை சேர்ந்தவர், உயர் கல்வி கற்றவர். அதனால், இவர் வெளிநாடுகளுக்கு தலைமறைவாக தப்பி செல்ல அவசியமில்லை. அதனால், அவரை தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டு இருப்பதை திரும்ப பெறும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்’ என கோரப்பட்டது.இதற்கு பதிலளித்த சிபிஐ வழக்கறிஞர், “இந்த வழக்கில் இதுவரை கார்த்தி சிதம்பரத்திற்கு மூன்று முறை நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் அலட்சியம் செய்த காரணத்தினால்தான் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார்’’ என்றார். இதை  கேட்ட தலைமை நீதிபதி ஜேஎஸ். கெஹர், ‘‘வழக்கில் போதிய ஆதாரம் இருந்தால் கார்த்தி சிதம்பரத்தை உடனடியாக கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்’’ என தெரிவித்தார். இதற்கு, சிபிஐ தரப்பு பதிலளிக்கையில், ‘’வழக்கில் போதிய ஆதாரங்கள் திரட்டி விட்டோம். இதில், மேலும் சில வலுவான ஆதாரங்களை திரட்டி வருவதால்தான் கைது நடவடிக்கையில் தாமதமாகிறது’’ என்றது.  இதையடுத்து, தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த வழக்கில் சிபிஐ மேலும் சில ஆதாரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள இருப்பதால் தேடப்படும் நபர் அறிவிப்பு நோட்டீசுக்கு தடை விதிக்க முடியாது. வரும் 23ம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம் கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும். அப்போது அவரது வழக்கறிஞர் உடன் இருக்கலாம்’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட கார்த்தி சிதம்பரம் வழக்கறிஞர், ‘‘சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக அனுமதியளிக்க வேண்டும்’’ என்று கோரினார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த தலைமை நீதிபதி ஜேஎஸ்.கெஹர், ‘‘டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக என்ன தயக்கம்?, கண்டிப்பாக டெல்லி சிபிஐ அலுவலகத்தில்தான் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்’’ எனக் கூறி விசாரணையை செப்டம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மூலக்கதை