வெள்ளப்பெருக்கு காரணமாக ரயில்வேக்கு 7 நாளில் ரூ.150 கோடி இழப்பு

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : அசாம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 7 நாட்களில் மட்டும் ரயில்வேக்கு ரூ.150 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது. அசாம், மேற்கு வங்கம், பீகார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. தண்டவாளங்கள் நீரில் மூழ்கியுள்ளதால் கடந்த 7 நாட்களில் மட்டும் வடகிழக்கு ரயில்வே மண்டலத்தில் 445 ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. 151 ரயில்கள் பாதியளவு ரத்து செய்யப்பட்டும், 4 ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்பட்டன.  இதே போல் கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் 66 ரயில் முழுவதுமாகவும், 105 ரயில்கள் பாதியளவு ரத்து செய்யப்பட்டும், 28 ரயில்கள் மாற்றுப்பாதையிலும் இயக்கப்பட்டதால் ரயில்வேக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அனில் சக்சேனா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: வடகிழக்கு ரயில்வேயில் மழை பாதிப்பு காரணமாக ஒட்டு மொத்தமாக இந்த மண்டலத்தில் மட்டும் ரூ.94 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது தவிர கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் தினசரி வருவாய் இழப்பு 5.5 கோடி என்ற அளவிலும்,  தண்டவாள சீரமைப்புக்கு ரூ.5 கோடியும் தேவைப்படும். ஒட்டுமொத்தமாக ரயில்வேக்கு ரூ.150 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சக்சேனா தெரிவித்தார்.

மூலக்கதை