கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல்

PARIS TAMIL  PARIS TAMIL
கட்சி, ஆட்சியில் பதவிகளை பிரிப்பதில் இழுபறி அ.தி.மு.க. அணிகள் இணைவதில் சிக்கல்

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டு கட்சி இரண்டாக உடைந்தது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் மற்றொரு அணியும் உருவாகியது. இந்த இரண்டு அணிகளையும் இணைப்பதற்கு முயற்சிகள் தொடங்கியபோது, ஓ.பன்னீர்செல்வம் 2 முக்கிய நிபந்தனைகளை விதித்தார்.

அதாவது, “சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்க வேண்டும். ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்” என்பது தான் அந்த நிபந்தனைகள். ஆனால், முதலில் இந்த நிபந்தனைகளை நிறைவேற்ற எடப்பாடி பழனிசாமி யோசித்தாலும், டி.டி.வி.தினகரனுடன் மோதல் ஏற்பட்ட பிறகு, சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார்.

இதனால், இரு அணிகளும் இணைவதற்கான சூழல் பிரகாசமாக தெரிந்தது. இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் மற்றொரு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

இவ்வாறு, ஓ.பன்னீர்செல்வத்தின் 2 நிபந்தனைகளையும் நிறைவேறுவதற்கான சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து, அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைவதற்கான நேரம் கனிந்தது.

இந்த நிலையில், நேற்று மாலை ஓ.பன்னீர்செல்வம் அணியினர் சென்னை அடையாறு பசுமை வழிச்சாலையில் (கிரீன்வேஸ் ரோடு) உள்ள அவரது இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் இ.மதுசூதனன், கே.பி.முனுசாமி, செம்மலை, பி.எச்.பாண்டியன், மைத்ரேயன் எம்.பி., மாபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், ராஜகண்ணப்பன், ஜே.சி.டி.பிரபாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், ஆட்சி மற்றும் கட்சியில் எந்தெந்த பதவிகளை கேட்டுப்பெறுவது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதேபோல், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், அவரது வீட்டில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார், வெல்லமண்டி நடராஜன், மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே, நேற்று மதியம் சென்னை போரூர் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயாரின் உடல் நலம் குறித்து விசாரிக்க சென்ற அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கைகளை பின்னர் எடப்பாடி பழனிசாமியிடம் அவர்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு, அ.தி.மு.க. இரு அணிகளிலும் ஆலோசனை நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில், மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை பூக்களால் அலங்கரிக்கும் பணி தொடங்கியது. போலீசாரும் அங்கு அதிக அளவில் குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், நிர்வாகிகளும் அங்கு வரத்தொடங்கினார் கள். அதேபோல், ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கும் தொண்டர்கள் வரத்தொடங்கினார்கள்.

எடப்பாடி பழனிசாமி வீட்டிலும், ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலும் அவர்கள் புறப்படுவதற்கு கார்கள் தயார் நிலையில் கொண்டுவந்து நிறுத்தப்பட்டன. இதனால், இருவரும் நேராக ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அணிகள் இணைப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் முடியாமல் இழுத்துக்கொண்டே சென்றது.

அதே நேரத்தில், எடப்பாடி பழனிசாமி வீட்டில் இருந்த அமைச்சர்கள், ஓ.பன்னீர்செல்வத்தின் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால், அங்கிருந்து எந்த வித சாதகமான பதிலும் வராத நிலையில், இரவு 8.45 மணி அளவில் ஒவ்வொரு அமைச்சராக அங்கிருந்து புறப்பட்டு செல்லத் தொடங்கினார்கள்.

ஜெயலலிதா நினைவிடத்தில் காத்திருந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், தொண்டர்களும் அங்கிருந்து ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்ல தொடங்கினார்கள். இதனால், அ.தி.மு.க. இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

கட்சியிலும், ஆட்சியிலும் பதவிகளை பகிர்ந்துகொள்வதில் ஏற்பட்ட இழுபறியின் காரணமாகவே அ.தி.மு.க. அணிகள் இணைப்பில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆட்சியில் துணை முதல்- அமைச்சர் பொறுப்பும், கட்சியில் வழிநடத்தும் குழு தலைவர் பொறுப்பும் வழங்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், 2 பேருக்கு அமைச்சர் பொறுப்பு தருவதாகவும், வழிகாட்டி குழுவில் இருவருக்கு உறுப்பினர் பொறுப்பு தருவதாகவும் கூறப்பட்டது.

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், தனக்கு பொதுப்பணித்துறையும், உள்துறையும் கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், தனது அணியில் உள்ள மாபா பாண்டியராஜன், செம்மலை ஆகியோருக்கு முக்கிய துறைகளை தரும்படி கேட்டுள்ளார். தனது ஆதரவாளர்களுக்கும் கட்சியில் மாவட்ட செயலாளர்கள் பொறுப்பையும், மாநில நிர்வாகிகள் பொறுப்பையும் அதிகமாக தரும்படி ஓ.பன்னீர்செல்வம் நிர்ப்பந்தித்ததாக கருதப்படுகிறது.

இதற்கு எடப்பாடி பழனிசாமி அணியினர் சம்மதம் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் தங்கள் முடிவில் இருந்து இறங்கி வருவதாக இல்லை. தொடர்ந்து, இரு அணி நிர்வாகிகளும் போன் மூலமே பேசிக்கொண்டனர். ஆனால், எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், ஒவ்வொருவராக புறப்பட்டு செல்லத் தொடங்கினார்கள்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் வந்து அணிகள் இணைப்பு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்று ஜெயலலிதா சமாதியில் காத்திருந்த அ.தி.மு.க.வினர், அவர்கள் இருவரும் அங்கு வராததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

ஏற்கனவே, ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்துத்தான் கடந்த பிப்ரவரி மாதம் 7-ந் தேதி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி, பிரிந்து சென்றார். அதே இடத்தில் மீண்டும் அ.தி.மு.க. இணையும் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடைபெறாமல் முடிந்துள்ளது.

மேற்கொண்டு இரு அணிகள் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிகிறது.

இந்த சூழ்நிலையில், திருவாரூரில் இன்று (சனிக்கிழமை) நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்க இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தனது முடிவை தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மூலக்கதை