ஜப்பான், தென்கொரியாவுடன் இணைந்து வடகொரியாவுக்கு உடனே பதிலடி அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை

தினகரன்  தினகரன்

வாஷிங்டன் : ‘அமெரிக்கா மீதோ அல்லது அதன் நட்பு நாடுகள் மீதோ ஏவுகணை தாக்குதல் நடத்த திட்டமிட்டால் வடகொரியாவுக்கு உடனடியாக பதிலடி கொடுக்கப்படும்’ என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜப்பான் அருகே உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு மீது தாக்குதல் நடத்த வடகொரியா 4 ஏவுகணைகளை தயார்நிலையில் வைத்தது.  இதையறிந்த அமெரிக்காவின்  விமானம் தாங்கி கப்பல்கள் தென் சீன கடல் பகுதிக்கு விரைந்தன. இதையடுத்து, ஏவுகணைகளை வாபஸ் பெறும்படி  வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இருப்பினும், போர் பதற்றம் இன்னும் தீரவில்லை. ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தாரோ கோனோ, ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஓனோடெரியா ஆகியோர் போர் பதற்றம் தொடர்பாக ஆலோசனை நடத்த வாஷிங்டன் சென்றுள்ளனர். அங்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிசை சந்தித்து பேசினர். பின்னர், மூவரும் கூட்டாக  பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது,  அமெரிக்க ராணுவ அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் கூறுகையில், ‘‘வடகொரியாவின் எந்த தாக்குதலையும் எதிர்கொள்ள அமெரிக்கா தயாராக இருக்கிறது. அமெரிக்கா மீதோ அல்லது குவாம் தீவு மீதோ அல்லது எங்கள் நட்பு நாடுகளான ஜப்பான், தென்கொரியா மீதோ ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டால், அல்லது தாக்குதல் நடத்த திட்டமிட்டாலோ வடகொரியாவுக்கு நாங்கள் உடனடியாக பதிலடி கொடுப்போம்’’ என்றார்.  ஜப்பான் ராணுவ அமைச்சர் இட்சுனோரி ஓனோடெரியா கூறுகையில், “எங்கள் நாட்டை பாதுகாப்பது குறித்து அமெரிக்காவுடன் ஆலோசனை நடத்தினோம்” என்றார்.

மூலக்கதை