40 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படை புதிய தளபதியாக தமிழர் நியமனம்: புலிகளின் ஆயுதக்கப்பலை அழித்தவர்

தினகரன்  தினகரன்

கொழும்பு : இலங்கை கடற்படை தளபதியாக ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நேற்று நியமிக்கப்பட்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கை கடற்படை தளபதியாக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படை தளபதியாக இருந்த வைஸ் அட்மிரல் ரவி விஜயகுணரத்னே ஒய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தளபதியாக ரியர் அட்மிரஸ் ட்ராவிஸ் சின்னையாவை, கடற்படை தளபதியாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நியமித்துள்ளார். இவர் இலங்கை கடற்படையில் கடந்த 1982ம் ஆண்டு சேர்ந்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இவர் சிறப்பாக செயல்பட்டார். கடந்த 2007ம் ஆண்டு இந்தோனேஷியா சர்வதேச கடல் பகுதியில், புலிகளின் ஆயுதக் கப்பலை சின்னையா தலைமையிலான இலங்கை கடற்படையினர் அழித்தனர். இது இலங்கை கடற்படை வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாக கருதப்பட்டது. இதற்கு முன் கடந்த 1960ம் ஆண்டுகளில் ராஜன் கதிர்காமர் என்ற தமிழர் இலங்கை கடற்படை தளபதியாக இருந்தார். இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இலங்கை அதிபர் சிறிசேனா, ‘‘இலங்கை கடற்படையில் பல ஆண்டு காலம் விசுவாசமாக பணியாற்றிய ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்’’ என குறிப்பிட்டுள்ளார்.   

மூலக்கதை