ஸ்பெயினில் அடுத்தடுத்து 2 இடங்களில் வாகனங்களை மோதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 14 பேர் பலி: 100 பேர் படுகாயம்: 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

தினகரன்  தினகரன்

பார்சிலோனா : ஸ்பெயினில் மக்கள் கூட்டத்தில் வாகனத்தை ஓட்டி, தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய 2 தாக்குதலில் 14 பேர் பலியாயினர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 5 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஸ்பெயினின் சுற்றுலா நகரான பார்சிலோனாவில் பிரபலமான லாஸ் ராம்பிளாஸ் பகுதியில் நேற்று முன்தினம் மாலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். வெளிநாட்டு பயணிகள் அதிகளவில் இருக்கும் இப்பகுதியில், மக்கள் கூட்டத்தில் வேன் ஒன்றை தாறுமாறாக ஓட்டிச் சென்றனர். நடைபாதையில் சென்ற மக்கள் மீது வேன் மோதி தூக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்தில் பலர் பலியாயினர். சிறிது தூரம் சென்ற பிறகு, வேனை ஓட்டிய தீவிரவாதி இறங்கி தப்பி விட்டான். இந்த தாக்குதலில் 14 பேர் பலியாயினர். பெண்கள், குழந்தைகள் என 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பெரும்பாலோனார் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்திற்கு ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த பீதி அடங்குவதற்குள், பார்சிலோனாவில் இருந்து 120 கி.மீ. தொலைவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கேம்பிரில்ஸ் நகரில் நள்ளிரவு 1 மணியளவில் கார் ஒன்று, மக்கள் கூட்டத்தில் தாறுமாறாக ஓடியது. கார் மோதியதில், பொதுமக்கள் 6 பேரும், போலீஸ்காரர் ஒருவரும் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், காரை சுற்றிவளைத்து மடக்கினர். காரில் இருந்த நபர்கள், உடலில் வெடிகுண்டுகளை கட்டியிருந்தனர். இதனால், அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார், காரிலிருந்த 5 பேரையும் சுட்டுக் கொன்றனர். இவர்கள் அனைவரும் ஐஎஸ் தீவிரவாதிகள் என்றும், அவர்கள் உடம்பில் இருந்தது போலி வெடிகுண்டுகள் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இவர்களுக்கும் பார்சிலோனா தாக்குதல் சம்பவத்திற்கும் தொடர்பிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும், பார்சிலோனா தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஸ்பெயினை சேர்ந்த ஒருவரையும், மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பி ஓடிய வேன் டிரைவரை கண்டுபிடிக்கும் முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விசாரிக்கப்படும் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த 18 வயதான அகதி மவுசா ஒகாபிர், வேனை ஓட்டி வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 8 மணி நேர இடைவெளியில், ஸ்பெயினில் அடுத்தடுத்து நடந்த 2 தீவிரவாத சம்பவங்கள், அந்நாட்டு மக்களையும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் ஆறுதல் தெரிவித்துள்ளார். தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.வாகன தாக்குதலுக்கு இதுவரை 100 பேர் பலிஐரோப்பாவில் ஐஎஸ் தீவிரவாதிகள், வெடிகுண்டுகளுக்கு பதிலாக கனரக வாகனங்களை கடத்தி, மக்கள் கூட்டத்தில் தாக்குதல் நடத்துவது தொடர்கதையாக உள்ளது. கடந்த ஓராண்டில் நடந்த 6 வாகன தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.* கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி பிரான்சின் நைஸ் நகரில் மக்கள் கூட்டத்தில் டிரக்கை ஓட்டிய தீவிரவாதி, 86 உயிர்களை பலி வாங்கினான்.* கடந்த டிசம்பர் 19ம் தேதி, ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டில் டிரக்கை ஓட்டிய தீவிரவாதியால், 12 பேர் பலியாயினர்.* இங்கிலாந்தின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தில் காலித் மசூத் என்ற தீவிரவாதி கடந்த மார்ச் 22ம் தேதி கூட்டத்தில் வாகனத்தை ஓட்டியதில் 5 பேர் கொல்லப்பட்டனர். * கடந்த ஏப்ரல் 7ம் தேதி ஸ்வீடனின் ஸ்டால்க்ஹோமில் 5 பேர் பலியாயினர்.* கடந்த ஜூன் 3ம் தேதி லண்டன் பாலத்தில் தாறுமாறாக வேனை ஓட்டி தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாயினர்.

மூலக்கதை