இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா, ஜப்பான் முடிவு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: கிழக்கு ஆசிய நாடான, வட கொரியாவின் அச்சுறுத்தலை சமாளிக்கும் வகையில், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன், பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்த, அமெரிக்கா, ஜப்பான் நாடுகள் முடிவு செய்துள்ளன.
அமெரிக்கா, ஜப்பான் நாடுகளின் வெளியுறவு மற்றும் ராணுவ அமைச்சர்கள் கூட்டம், அமெரிக்காவின் வாஷிங்டனில் நேற்று நடந்தது. அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர், ரெக்ஸ் டில்லர்சன், ராணுவ அமைச்சர், ஜேம்ஸ் மாட்டிஸ்; ஜப்பான் வெளியுறவு அமைச்சர், டாரோ கோனோ, ராணுவ அமைச்சர், இட்சுனோரி ஓனோடரா ஆகியோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்துக்குப் பின், அவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை:
இரு நாடுகளின் இரு அமைச்சர்கள் கூட்டத்தில், பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, வட கொரியாவின் அச்சுறுத்தல் குறித்தே விவாதிக்கப்பட்டது. அணு ஆயுதத் தயாரிப்பை நிறுத்திவிட்டு, உலக நாடுகளுடன் இணைந்து செயல்பட, வட கொரியா முன்வர வேண்டும். இது குறித்து, வட கொரியாவிடம், அதன் நட்பு நாடான, சீனா வலியுறுத்த வேண்டும்.
வட கொரியாவின் அச்சுறுத்தல் உள்ளதால், தென்கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடனான, பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவை மேம்படுத்த வேண்டும் என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை