இரு தரப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு வராமல் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்படும் : அமைச்சர் உறுதி

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : ‘‘இரு தரப்பு மாணவர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில், மருத்துவ கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும்’’ என தமிழக சுகாதார அமைச்சர் விஜய பாஸ்கர் கூறினார். இது தொடர்பாக டெல்லியில் நேற்று அவர் அளித்த பேட்டி: நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிப்பதற்கான சட்ட வரைவு மசோதா, மத்திய ்அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.  அதற்கு மத்திய உள்துறை, சட்ட அமைச்சகத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஓரிரு நாளில் ஜனாதிபதியும் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று நம்புகிறோம். தமிழக மாணவர்களின் நலன் கருதி, நீட் தேர்வுக்கு எதிராக தமிழக அரசு மட்டுமே தொடர்ந்து போராடி வருகிறது. அதனால், நீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல செய்தி வரும் என்று எதிர்பார்க்கிறோம். உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல பதிலை தரும் என நம்புகிறோம்.பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு தீர்க்கமான முடிவை எடுத்துள்ளது. ஆனால், இந்த முடிவால் மற்ற மாணவர்களுக்கு (சிபிஎஸ்இ) எவ்வித பாதிப்பும் ஏற்படாதவாறு அரசின் செயல்பாடுகள் இருக்கும். மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு ஒருவாரம்  போதுமானதாகும். நீட் தேர்வு, தமிழக அரசுக்கு எதிரானது அல்ல. நீட் தேர்வின் நிலவரம் குறித்தும், மாநில பாடத் திட்டத்தில் படித்த தமிழக மாணவர்களின் நிலைமை குறித்தும் இந்திய மருத்துவ கவுன்சிலிடம் எடுத்துக் கூற, தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசித்து வருகிறார். நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களோ மற்ற மாணவர்களோ அச்சப்பட தேவையில்லை. தமிழக அரசின் இந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க உதவிய பிரதமருக்கும், துறை சார்ந்த அமைச்சர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கலந்தாய்வு நடத்துவதற்காக திட்டத்தை உருவாக்க 5 ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை முதல்வர் நியமித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை