டோக்லாமில் சீனா சாலை பணிகளை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு : இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் ஜப்பான்

தினகரன்  தினகரன்

டெல்லி: டோக்லாம் விவகாரத்தில் ஜப்பான் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்தியா - சீனா - பூடான் நாடுகளின் எல்லையாக இருக்கும் டோக்லாமில் சீனா அத்துமீறி சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டதால் பிரச்சனை உருவானது. சீனாவின் நடவடிக்கையை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியதால், இரு நாடுகளும் அங்கு வரலாறு காணத வகையில் படைகளை குவித்துள்ளதால் கடந்த 2 மாதங்களாக போர் பதற்றம் காணப்படுகிறது. இந்நிலையில் டோக்லாம் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஜப்பான், அதற்கு காரணம் இந்தியாவின் பக்கம் நியாயம் இருப்பதாக கூறியுள்ளது. இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் கென்ஜி ஹிராமாட்சு வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரச்சனைக்குரிய எல்லை பகுதியில் கட்டுமான பணியை சீனா மேற்கொள்ளக் கூடாது என குறிப்பிட்டுள்ளார். இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை டோக்லாம் எல்லை பகுதியில் எவ்வித மாற்றஙகளும் நிகழ கூடாது என தெரிவித்துள்ளார். இந்தியா – சீனா பிரச்சனையை தொடர்ந்து தாங்கள் கவனித்து வருவதாகவும், இந்தியாவின் செயல்பாடு பூடானுடனான ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்துள்ளதாகவும் ஜப்பான் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இருநாட்டு பிரச்சனைக்கு அமைதியான முறையில் தீர்வு காண விரும்புவதாக குறிப்பிட்டார். இதனை தாங்கள் மிக முக்கிய நடவடிக்கையாக கருதுவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹெய்தர் நையர், இந்தியா - சீனா நாடுகள் டோக்லாம் விவகாரம் குறித்து நேரடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதே அமெரிக்காவின் விருப்பம் என கூறியுள்ளார். ஆனால் படைகளை முழுமையாக வாபஸ் பெறும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என இந்தியாவும், சீனாவும் மாறி மாறி கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை