கர்நாடகம் புதிய அணை கட்ட ஒப்புதல் தருவதா? டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கர்நாடகம் புதிய அணை கட்ட ஒப்புதல் தருவதா? டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு

திருச்சி: காவிரி நதிநீர் பங்கீடு மீதான இறுதிக்கட்ட விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த மாதம் முதல் நடத்தி வருகிறது.   கர்நாடகாவும் கேரளாவும் தங்களின் வாதங்களை முடித்து விட்டன. இறுதியாக, தமிழக அரசின் வாதத்தை நீதிபதிகள் கேட்டு வருகின்றனர்.

நேற்று 6வது நாளாக தமிழக அரசின் வழக்கறிஞர் சேகர் நாப்தே தனது வாதத்தை தொடர்ந்தார். முன்னதாக, ‘‘தமிழகத்துக்கு தண்ணீர் வழங்குவதற்காக கர்நாடகாவில் ஏன் புதிய அணையை கட்டக்கூடாது? அவ்வாறு கட்டப்படும் அணையை கண்காணிக்க புதிய ஆணையம் ஒன்றையும் ஏன் அமைத்து செயல்படுத்தக் கூடாது? இப்படி செய்தால் மழைக் காலத்தில் சேமித்து வைக்கப்படும் அணையின் நீரை வறட்சி காலத்தில் தமிழகத்திற்கு வழங்கலாம் அல்லவா?’ என நீதிபதிகள் கேட்டனர்.



இதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர் சேகர் நாப்தே, ‘‘இப்படி கட்டப்படும் அணையில் மழை இல்லாத நேரத்தில் காலியாக இருந்தால் தமிழகத்துக்கு எப்படி தண்ணீர் கிடைக்கும்? அப்போது தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா தெரிவித்தால் என்ன செய்வது? மேலும், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரில் கர்நாடக அரசு கழிவுகளை கலந்து அனுப்புகிறது. ஒருவேளை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி கர்நாடகா அரசு தமிழகத்திற்கு தண்ணீர் தருவதாக உறுதியளித்தால் புதிய அணையை கட்ட தமிழகம் சம்மதிக்கும்.

ஆனால், அது சாத்தியமில்லை. ஏனெனில், கர்நாடக அரசு இதுவரை தேசிய நதிநீர் கொள்கைகளுக்கு எதிராகதான் செயல்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா தந்ததாக வரலாறே கிடையாது’’ என்று கூறினார்.
 
தமிழக விவசாயிகள் கொதிப்பு தமிழகம் சார்பில்ஆஜரான வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்த கருத்து தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்டா விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி. ஆர்.

பாண்டியன் கூறியதாவது:புதிய அணை கட்டிக்கொள்ளலாம் என தமிழக அரசே தெரிவித்து இருப்பது காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் முயற்சி. தமிழக அரசு தன்னிச்சையாக இந்த கருத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு அனைத்து கட்சி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை கூட்டி கருத்து கேட்டு இருக்க வேண்டும் என்றார்.

காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன்  கூறியதாவது:கர்நாடகம் புதிய அணை கட்டிக் கொள்வதற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் தெரிவித்துள்ள செய்தி, தமிழர்கள் தலையில் இடி விழுந்ததுபோல் உள்ளது. காவிரி நடுவர் மன்ற  தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு உரிய தண்ணீரை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் போட்ட வழக்கானது, மேகதாதுவில் அணை கட்டலாமா வேண்டாமா என்ற வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் தமிழ்நாடு அரசின் ஒப்புதலோடு நடந்துள்ளது என்றார்.

.

மூலக்கதை