தினகரன் கருத்துக்கு பதிலளிக்க விருப்பம் இல்லை: செங்கோட்டையன் பேச்சு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தினகரன் கருத்துக்கு பதிலளிக்க விருப்பம் இல்லை: செங்கோட்டையன் பேச்சு

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியம் வாயலூரில் இயங்கி வந்த அரசு உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் புதிய பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

உச்சநீதி மன்றம் தீர்ப்பு பற்றி கருத்து கூற முடியாது. நீட் தேர்வில் விலக்கு வேண்டும் என பிரதமரிடம் தமிழக முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

அதே நேரத்தில், மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, தமிழக  அரசு 54 ஆயிரம் கேள்விகள் மற்றும் விடைகள், வரைபடங்களுடன் 2 வார காலத்திற்கு பிறகு வழங்குவதற்கு தயாராகி வருகிறோம். இதன்மூலம், எந்த பொதுத்தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியும்.
 
12ம் வகுப்பு மாணவர்களுக்கு 409 மையங்களில் தேர்வுகளில் தயாராவதற்கு மையங்கள் அமைத்து, விடுமுறை நாளான சனிக்கிழமைகளில் 3 மணி நேரம் பயிற்சி அளிக்கப்படும்.

ஒருமாத காலத்திற்கு பிறகு எந்த பள்ளி மற்றும் பகுதிகள் குறித்து பட்டியல் வெளியிடப்படும். இதன்மூலம் மத்திய அரசு கொண்டு வரும் எந்த பொதுத்தேர்வுகளையும் சந்திக்க முடியும்.

நீட் தேர்வில் 3 ஆண்டு காலத்திற்கு விதி விலக்கு அளிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பரிசீலனை முடிவுகள் குறித்து 2 அல்லது 3 நாட்களுக்குள் பிறகுதான் தெரியும். இதன்பிறகு, முதல்வரிடம் ஆலோசித்து பொதுத்தேர்வை மாணவர்கள் எளிதாக சந்திப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

தினகரன் தொடர்பான கருத்துகளுக்கு பதிலளிக்க தனிக்குழு உள்ளது.

எனக்கு பதில் அளிக்க விருப்பமில்லை.

ஓபிஎஸ் அணி, முதல்வர் பழனிச்சாமி தலைமையிலான அணி மிக விரைவில் இணையும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் கலெக்டர் பொன்னையா, மரகதம் குமரவேல் எம்பி, எம்எல்ஏக்கள் டாக்டர் ஆர். டி. அரசு, கோதண்டபாணி, மத்திய மாவட்ட செயலாளர் ஆறுமுகம், முன்னாள் எம்எல்ஏக்கள் தனபால், ராஜி, மற்றும் பக்கீர் முகமது, கலியபெருமாள், காதர் உசேன், நாகமுத்து, ஆயப்பாக்கம் பாஸ்கர், பாபு மற்றும் ஸ்ரீதர், ஆறுமுகம், சபாபதி, நாகமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

.

மூலக்கதை