ஜெ., மரணம் குறித்த நீதி விசாரணை மூலம் சசிகலா மீதான அவப்பெயர் நீங்கும் : டி.டி.வி.தினகரன் கருத்து

தினகரன்  தினகரன்

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பின், சிறை வளாகத்தில் செய்தியாளர்களை டி.டி.வி.தினகரன்  சந்தித்தார். அப்போது பேசிய அவர் தொண்டர்களின் விருப்பப்படி அல்லாமல் பதவியை காப்பாற்றிக் கொள்ளவே OPS - EPS அணிகள் இணைப்பு முயற்சிகள் நடைபெற்று வருவதாக சாடினார். பதவிக்காக அணிகள் இணைந்தால் அது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது என்றார். போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை நினைவிடமாக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த அறிவிப்பு அவசர கதியில் வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். தொண்டர்களின் எண்ணங்களுக்கு மாறாக எதுவும் நடைபெற கூடாது என்றார். மேலும் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிவிசாரணை நடைபெற வேண்டும் என தாம் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார். நீதி விசாரணை நடந்தால் தான் சசிகலா குற்றமற்றவர், சொக்கத்தங்கம் என்பது தெரிய வரும் என்றார். விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் அதற்கு தங்களது தரப்பிலிருந்து முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்றார். விசாரணையை எதிர் கொண்டு நாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார். ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த வீடான வேதா இல்லத்தை, சுயநலத்திற்காக நினைவிடமாக அறிவித்திருப்பது சரியாக இருக்காது என்றார். கட்சியின் நலனுக்காக விரைவில் சில அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றார். எங்களின் நிலைப்பாட்டை தற்போது வெளிப்படையாக கூற முடியாது. எடப்பாடி அணியில் ஸ்லீப்பர் செல் போல உள்ள எனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள், நேரம் வரும் போது வெளி வருவார்கள் என்றார். தேவைப்படும்போது எங்களின் பலத்தை நிருபிப்போம் என்றார்.

மூலக்கதை