திடீர் காயத்தால் நம்பகத்தன்மை கேள்விக்குறி: ‘ரசிகர்களை எந்த விதத்திலும் நான் ஏமாற்ற மாட்டேன்’: உசேன் போல்ட் விளக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
திடீர் காயத்தால் நம்பகத்தன்மை கேள்விக்குறி: ‘ரசிகர்களை எந்த விதத்திலும் நான் ஏமாற்ற மாட்டேன்’: உசேன் போல்ட் விளக்கம்

லண்டன்: லண்டனில் சமீபத்தில் நடந்த, உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளுடன், உலகின் மின்னல் வேக மனிதராக வர்ணிக்கப்படும் ஜமைக்காவின் உசேன் போல்ட் ஓய்வு பெற்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், முதலில் நடந்த 100 மீட்டர் ரேஸில், உசேன் போல்ட் வெண்கல பதக்கம் மட்டுமே வென்றார்.

இதனால் அவரது கடைசி ரேஸான 4X100 மீட்டர் ரிலே மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஜமைக்கா அணி சார்பில், 4வது வீரராக ஓடிய உசேன் போல்ட், இலக்கை எட்ட 30 மீட்டர் மட்டுமே இருந்த நிலையில், இடது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக, திடீரென தடுமாறி விழுந்தார்.

இதனால் ஜமைக்கா அணிக்கு பதக்கம் கிடைக்கவில்லை.

இதன்பின் உசேன் போல்ட்டின் நேர்மை குறித்து கேள்வி எழுந்த நிலையில், தோல்வியை சமாளிக்க உசேன் போல்ட் நடிப்பதாகவும் ஒரு சிலர் கூற தொடங்கினர்.

இதனால் கிழிந்த தொடையை காட்டும் தனது மெடிக்கல் ஸ்கேன் அறிக்கையை உசேன் போல்ட் டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். அதில், உசேன் போல்ட் கூறியிருப்பதாவது: வழக்கமாக எனது மெடிக்கல் அறிக்கையை பொது மக்கள் பார்வைக்கு வெளியிட மாட்டேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக, ‘நான் உண்மையில் காயம் அடைந்தேனா?’ என பலர் எழுப்பிய கேள்விகளை கேட்டேன்.

காயம் குணமடைந்து நான் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப 3 மாதங்கள் ஆகும்.

எந்த விதத்திலும் எனது ரசிகர்களை நான் ஏமாற்ற மாட்டேன். சாம்பியன்ஷிப் போட்டியில், எனது ரசிகர்களுக்காக கடைசியாக ஒரு முறை ஓட வேண்டும் என்பதே எனது ஒட்டுமொத்த ஆசையாக இருந்தது.

எனினும் எனக்கு ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு நன்றி. எனது வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்திற்கு செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். எனினும் ஸ்கேன் ரிப்போர்ட்டை சிறிது நேரத்தில் உசேன் போல்ட் நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை