அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு மீதான தாக்குதல் நிறுத்தி வைப்பு: வடகொரியாவுக்கு டிரம்ப் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு மீதான தாக்குதல் நிறுத்தி வைப்பு: வடகொரியாவுக்கு டிரம்ப் பாராட்டு

வாஷிங்டன்: வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளையும், அணு ஆயுத சோதனைகளையும் நடத்தியது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த சூழலில் வடகொரியாவை கண்டிக்கும் விதமாக ஐநாவுடன் இணைந்து பொருளாதார தடையை அமெரிக்கா விதித்தது. அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவு ஜப்பான் அருகே அமைந்துள்ளது.

இங்கு தனது போர்ப்படைகளை நிறுத்தியுள்ள அமெரிக்கா, தீவிர ராணுவ பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து குவாம் மீது தாக்குதல் நடத்த ஏதுவாக 4 ஏவுகணை நிறுத்தி வைக்கும்படி தனது படையினருக்கு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.

இதனால் அமெரிக்கா, வடகொரிய இடையில் போர் பதற்றம் ஏற்பட்டது.

வடகொரியா தாக்குதல் நடத்தினால் உலகம் இதுவரை கண்டிராத வகையில் வட கொரியா மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்தார்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. ஆசிய பிராந்தியத்தில் அசாதாரணமான சூழல் உருவானது.

இதற்கிடையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்களது நாட்டின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து வடகொரியா சற்று தணிந்து போக முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து குவாம் தீவு மீதான தாக்குதலை திரும்ப பெறவும், 4 ஏவுகணையும் பாசறைக்கு திரும்பும் படியும் உத்தரவிட்டார். குவாம் மீதான தாக்குதல் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.

இதனால் வடகொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் சற்றே தணிந்துள்ளது.

வடகொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறுகையில், வட கொரிய அதிபர் மிகவும் புத்திசாலித்தனமான முடிவை எடுத்துள்ளார்.

இது நியாயமான முடிவாகும். அவரது இந்த மாற்றத்தை வரவேற்கிறேன்.

இதன் மூலம் மிகப் பெரிய பேரழிவு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

இருந்த போதிலும் இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து இறுக்கம் நிலவி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

.

மூலக்கதை