நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவிப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது

தமிழ் முரசு  தமிழ் முரசு
நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவிப்பு எதிரொலி: ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் வந்தது

சென்னை: ஜெயலலிதா வாழ்ந்த வீடு நினைவு இல்லமாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததன் எதிரொலியாக, போயஸ் கார்டன் இல்லம் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வீட்டுக்குள் சசிகலா குடும்பத்தினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும்.

மேலும், ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ் கார்டன் இல்லம் நினைவிடம் ஆக்கப்பட்டு பொதுமக்கள் பார்க்க வசதி செய்து தரப்படும் என்று அறிவித்தார்.
முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து, போயஸ் கார்டன் பகுதி முழுவதும் நேற்று மாலையே போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

போயஸ் கார்டன் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா வீட்டுக்கு செல்லும் பிரதான சாலை மற்றும் போயஸ் கார்டன் சாலை, ஜெயலலிதா வீட்டின் முன் பகுதி என 3 இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போயஸ் கார்டன் பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

குறிப்பாக ஜெயலலிதா வீட்டுக்குள் செல்ல, சசிகலாவின் உறவினர்கள் யாரும் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. தற்போது போயஸ் கார்டன் இல்லம், இளவரசியின் மகன் விவேக் கட்டுப்பாட்டில் உள்ளது.

விவேக் மற்றும் அவரது உறவினர்கள் யாரும் ஜெயலலிதா வீட்டில் தங்குவது இல்லை. சில வேலையாட்களும், மன்னார்குடி பகுதியை சேர்ந்த செக்யூரிட்டிகள் மட்டுமே உள்ளனர்.

சசிகலா உறவினர்கள் சிலர் அவ்வப்போது பகல் நேரத்தில் வந்து செல்கிறார்கள். தற்போது, அதற்கும் போலீசார் தடை விதித்து விட்டதாக கூறப்படுகிறது.

தமிழக அரசு, போயஸ் கார்டன் இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என அறிவித்துள்ளதால், ஜெயலலிதா வீடு எப்போது நினைவிடமாக மாற்றப்படும் என்ற ஆவல் அதிமுக தொண்டர்களிடம் அதிகரித்துள்ளது.

ஆனால், சில சட்ட நடவடிக்கைகளை முடித்த பிறகே ஜெயலலிதா வீட்டை நினைவிடமாக மாற்ற முடியும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து, தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் சுமார் 24 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது.

தற்போது இந்த வீடு யாருக்கு சொந்தம் என்பதில் சில சட்ட சிக்கல் உள்ளது. காரணம், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு போயஸ் கார்டன் சம்பந்தமாக இதுவரை வெளிப்படையாக எந்த தகவலும் வெளிவரவில்லை.

ஜெயலலிதா, போயஸ் கார்டன் வீடு குறித்து உயில் எழுதி வைத்துள்ளாரா? என்று பார்க்க வேண்டும். அல்லது அவருடன் சுமார் 25 ஆண்டுகளாக இருந்த சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் யாராவது இந்த வீட்டை தங்கள் பெயருக்கு மாற்றி உள்ளனரா என்றும் பார்க்க வேண்டும்.

அப்படி உயில் எழுதவில்லை என்றால், அந்த வீட்டின் உண்மையான வாரிசுதாரர்கள் யார்

போயஸ் கார்டனுக்கு இழப்பீடு அமைச்சர் சி. வி. சண்முகம் பேட்டி

போயஸ் கார்டனுக்கு யார் உரிமையாளர்களோ, அவர்களுக்கு இழப்பீடு தந்து நினைவிடமாக்கப்படும் என்று அமைச்சர் சி. வி. சண்முகம் கூறினார். சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் சென்னையில் இன்று காலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

‘சட்டரீதியாக எங்களுக்குத் தான் உரிமை உள்ளது என்றும், எங்களை கேட்காமல் எப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம்’ என்று தீபக் மற்றும் தீபா ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளதாக கேட்கிறீர்கள். சட்டரீதியாக உரிமை பெற்றவர்கள், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்துக்கு யார் உரிமையாளர்களோ அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி அரசு அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை