காஞ்சிபுரத்தில் பரபரப்பு: பள்ளி வகுப்பறையில் திடீர் தீ: புத்தக பை, காலணி, சீருடைகள் நாசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரத்தில் பரபரப்பு: பள்ளி வகுப்பறையில் திடீர் தீ: புத்தக பை, காலணி, சீருடைகள் நாசம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் நகராட்சி பள்ளி வகுப்பறை திடீரென தீப்பிடித்து எரிந்ததில் 9 ஆயிரம் புத்தக பைகள், 3 ஆயிரம் காலணிகள், 8500 சீருடைகள் நாசமானது.   சமூக விரோதிகளின் நாசவேலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். காஞ்சிபுரம் பி. எஸ்.

நகராட்சி பள்ளி வளாகத்தில் மேலும் ஒரு பள்ளி கட்டிடம், காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (எஸ்எஸ்ஏ) இயங்கி வருகிறது. நகராட்சி பள்ளியின் ஒரு அறையில் காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய சீருடை, காலணி, புத்தக பை வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 9 மணி அளவில் பள்ளி அறையில் இருந்து கரும்புகை வந்தது. திடீரென அறை தீப்பற்றி எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள், ஆசிரியர்கள் உடனே காஞ்சிபுரம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.   இதில்,  9  ஆயிரம் புத்தக பைகள், 3 ஆயிரம் காலணிகள், 8500  சீருடைகள் எரிந்து நாசமானது.

இதையடுத்து வந்த விஷ்ணுகாஞ்சி போலீசார் தீவிபத்து குறித்த விசாரணை நடத்தினர். மாலை நேரத்தில்  பள்ளி வளாகத்தில் குடிமகன்கள் மதுஅருந்துவது, சீட்டாடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள், சிகரெட் பற்றவைத்துவிட்டு தீக்குச்சியை பள்ளி அறை ஜன்னலுக்குள் வீசி எறிந்ததால் தீப்பற்றியதா? அல்லது யாராவது வேண்டுமென்று தீவைத்தார்களா? மின்கசிவு காரணமாக தீப்பற்றியதா?  என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பள்ளி வகுப்பறை தீப்பற்றி எரிந்து புத்தக பைகள் நாசமான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

.

மூலக்கதை