போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா எதிர்ப்பது ஏன்? பரபரப்பு தகவல்கள்

தமிழ் முரசு  தமிழ் முரசு
போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா எதிர்ப்பது ஏன்? பரபரப்பு தகவல்கள்

சென்னை: ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா எதிர்ப்பது ஏன் என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

ஜெயலலிதா மரணத்துக்கு பிறகு அரசியலில் குதித்து அதிமுகவை கைப்பற்ற போவதாக சூளுரைத்த தீபா, பின்னர் திடீரென தன் வேகத்தை குறைத்து கொண்டார். அவரை நம்பி சென்ற ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.   யாரும் ஏற்காத வகையில் பேரவையை தொடங்கியதுடன் அதில் தனக்கு வேண்டப்பட்டவர்களை முக்கிய நிர்வாகிகளாக நியமித்தார்.



அரசியல் பேசிய தீபா, செயல் வடிவில் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்பதே ஆதரவாளர்களின் குற்றச்சாட்டு. ஒருகட்டத்தில் வெறுத்துபோன ஆதரவாளர்கள், கொஞ்சம், கொஞ்சமாக பேரவையை விட்டு ஓட்டம் பிடித்தனர்.

தற்போது தி. நகரில் உள்ள தீபாவின் அலுவலகம் ஆள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. இதற்கிடையில், குடும்ப சண்டையால் தன் கணவரை தீபா பிரிந்தார்.

அதன்பிறகு, தீபா ஒரு குறிப்பிட்ட நபரின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக அவர் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர். அதன்படி, தீபா தன் கார் டிரைவர் ராஜாவின் பேச்சை மட்டுமே கேட்பதாகவும், அவர் காட்டும் வழியிலேயே செல்வதாகவும் புகார் எழுந்தது.

சில மாதங்களுக்கு முன் போயஸ்கார்டன் இல்லத்துக்கு சென்ற தீபா, அங்கு தன்னை தன் சகோதரர் தீபக் அடியாட்களை வைத்து அடித்து விரட்டுவதாக பரபரப்பு ஏற்படுத்தினர்.

அதன்பிறகு, தீபா எங்கும் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடந்தார். ஆரம்பத்தில், ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் இல்லம் தனக்கு தேவையில்லை என்று கூறினார்.

பின்னர், திடீரென தன் அத்தையின் சொத்துக்களுக்கு தீபா உரிமை கொண்டாடினார். இந்த நிலையில், போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் அரசின் உத்தரவுக்கு தீபா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தன் இல்லத்தில் பேட்டி அளித்த தீபா, போயஸ் இல்லம் எனது அத்தையின் பூர்வீக சொத்து. அதில் எனக்கும், எனது சகோதாரர் தீபக்கிற்கும் உரிமை உள்ளது.

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதை ஏற்க முடியாது’’ என்றார். ஆரம்பத்தில், ஜெயலலிதாவின் சொத்தை விரும்பாத தீபா, திடீரென அதன் மீது ஆசை கொள்வதால் அவர் ஆதரவாளர்கள் உள்பட பல தரப்பினருக்கு சந்தேகம் ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து, தீபா பேரவை வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது: ஆரம்பத்தில் தீபா சுயமாக முடிவெடுத்தார்.

அதனால் அவரை நம்பி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தேடி வந்தனர். ஆனால் நாளடைவில் தீபா குறிப்பிட்ட ஒரு நபரின் வளையத்துக்குள் சிக்கி கொண்டார்.

இதனால் அவர் எந்த முடிவையும் சுயமாக எடுப்பதில்லை. தற்போது அவரை யார் பார்க்க சென்றாலும் அந்த நபரின் அனுமதி இல்லாமல் உள்ளே நுழைய முடியாது.

தினமும் வீட்டிற்குள் தீபா அடைத்து வைக்கப்படுகிறார்.

சுயமாக முடிவெடுக்கும்போது, கவுரவுத்துடன் தன் அத்தையின் சொத்து வேண்டாம் என எண்ணினார்.

ஆனால் தற்போது, அந்த குறிப்பிட்ட நபரின் தூண்டுதலால் தீபா தன் அத்தையின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட துவங்கி உள்ளார். அதனால் தான் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக்க அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

போயஸ் இல்லம் நினைவிடமாக்கப்பட்டால், அடுத்தடுத்து ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் என்பதால் இந்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை