போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதில் சட்டரீதியான நடைமுறை: முதல்வருக்கு தீபக் கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதில் சட்டரீதியான நடைமுறை: முதல்வருக்கு தீபக் கடிதம்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவிடமாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி நேற்று அறிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினரிடம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.

குறிப்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, போயஸ் இல்லத்தை நினைவிடமாக்க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த சொத்துக்கு சட்டப்படி வாரிசான தன்னிடம் எந்த கருத்தும் கேட்கவில்லை, எனவே அரசின் இந்த அறிவிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

அதேசமயம், தீபாவின் சகோதரர் தீபக் நேரடியாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் இருந்தார். தீபக் ஆரம்பத்தில் இருந்தே சசிகலா பக்கம் இருந்ததால் போயஸ் இல்லம் பற்றி எதுவும் பேசாமல் இருந்தார்.

இந்நிலையில், போயஸ் இல்லம் தொடர்பாக தீபக் இன்று முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா வசித்த போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றப்போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளது.

இதற்கு யாரும் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், இந்த சொத்து எனது பாட்டியும், ஜெயலலிதாவின் தயாருமான சந்தியாவுக்கு சொந்தமானது.

அதற்கு சட்டரீதியான வாரிசு நான் தான்.   எனவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சொத்தை தமிழக அரசு எடுத்து கொள்வதற்கு முன்பாக அதன் சட்டரீதியான வாரிசுகளிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.

இந்த சொத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற நாங்கள் விருப்பம் தெரிவித்தபோதிலும், தமிழக அரசு சட்டவிதிகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா தன் போயஸ் கார்டன் இல்லத்தை வேறு யாருக்கும் உயிலாக எழுதி கொடுக்கவில்லை.

ஜெயலலிதாவின் தாயாரும் எங்கள் பாட்டியுமான சந்தியா எழுதிய உயில் என்வசம் உள்ளது. அதற்கு உரிய வாரிசுதாரர்களாக நானும், தீபாவும் மட்டுமே உள்ளோம்.

போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு முன்பு எங்களது கருத்தை கேட்க வேண்டும்.

எனவே, போயஸ் கார்டன் விவகாரத்தில் எந்த முடிவு எடுத்தாலும் சட்டரீதியாக எடுக்கும்படி முதல்வரை கேட்டுக்கொள்கிறேன்.

.

மூலக்கதை