சென்னை, புறநகரில் விடிய விடிய மழை: சாலைகள் வெள்ளக்காடானது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சென்னை, புறநகரில் விடிய விடிய மழை: சாலைகள் வெள்ளக்காடானது

சென்னை: சென்னையில் நேற்றிரவு விடிய, விடிய கொட்டி தீர்த்த கனமழையால் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட வடமாவட்டங்களில் கடந்த 4 தினங்களாக பலத்த மழை பெய்கிறது.

நேற்று சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் மாநகரமே குளிர்ச்சி அடைந்துள்ளது. நேற்று மாலை நுங்கம்பாக்கம், எழும்பூர், சேத்துப்பட்டு, மயிலாப்பூர், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், கிண்டி, வேளச்சேரி, அடையாறு, திருவல்லிக்கேணி, சாந்தோம், ராயப்பேட்டை, பிராட்வே உள்பட பல இடங்களில் மழை பெய்யத் தொடங்கியது.

தண்டையார்பேட்டை, ஐஓசி, வண்ணாரப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் இரவு 7 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

வழக்கம்போல் சில மணி நேரங்களில் மழை விட்டுவிடும் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், சென்னை நகர் பகுதிகளில் மழை விடாமல் இன்று அதிகாலை 5 மணி வரை விடிய, விடிய கொட்டித் தீர்த்தது.

நேற்று இரவு மட்டும் சென்னையில் அதிகபட்சம் நுங்கம்பாக்கம் மற்றும் புறநகர் பகுதிகளில் தலா 6 செ. மீ மழை பதிவானது. பலத்த இடி சத்தத்துடன் பெய்த மழையால் மக்கள் யாரும் வெளியே செல்லாமல் வீட்டிற்குள் முடங்கினர்.

பஸ் மற்றும் ரயில்களில் வெளியே சென்றிருந்த மக்கள், இரவு வீடு திரும்பும்போது அவதி அடைந்தனர். மாநகர பஸ்களில் மழைநீர் புகுந்ததால் அதில் பயணித்தவர்கள் சிரமப்பட்டனர்.

தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் சென்னை மற்றும் புறநகர் பகுதி சாலைகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

குண்டும், குழியுமாக போடப்பட்ட சாலைகளில் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது.

குறிப்பாக, ராயப்பேட்டை ஒய்ட்ஸ் சாலை, திருவல்லிக்கேணி ஐஸ்அவுஸ் காவல்நிலையம் அருகில் உள்ள சாலைகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது.

.

மூலக்கதை