தெற்கு சூடானில் இருந்து உகாண்டாவுக்கு வரும் அகதிகளின் எண்ணிக்கை 1 மில்லியனை தாண்டியது: ஐ.நா தகவல்

தினகரன்  தினகரன்

கம்பாலா: வன்முறை சூழலால் உகாண்டாவுக்கு தப்பிச்செல்லும் தெற்கு சூடான் அகதிகளின் எண்ணிக்கை பத்து லட்சத்தை தாண்டியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், அகதிகளாக வந்தவர்களில் 85% பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் அதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உடனடியாக கூடுதல் ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்தை ஐ.நா. அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. மேலும், குறைந்தது 10 லட்சம் அகதிகள், சூடான், எத்தியோப்பியா, கென்யா, காங்கோ ஜனநாயக குடியரசு மற்றும் மத்திய ஆப்ரிக்க குடியரசு ஆகிய நாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் இருந்து நடந்த பல அட்டூழியங்கள் காரணமாக மூண்ட உள்நாட்டுப் போரால், தெற்கு சூடான் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. 2013ம் ஆண்டு ஜுலை மாதத்தில், தெற்கு சூடான் அதிபர் சல்வா கிர், நாட்டின் துணை அதிபரான ரெய்க் மச்சாரை பதவிநீக்கம் செய்தார், அதன்பிறகு மேலும் பல சர்ச்சைகள் கிளம்பின. இதனால், இவ்விரு தரப்பினருக்கும் ஆதரவான படையினர் மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். இந்த வன்முறை சூழல் காரணமாக தெற்கு சூடானில் இருந்து அகதிகளாக உகாண்டா, கென்யா போன்ற நாடுகளுக்கு படையெடுக்க தொடங்கினர். தங்கள் நாட்டுக்கு வருகைபுரியும் அகதிகளை வரவேற்று அவர்களுக்கு ஆதரவளிக்கும் உகாண்டாவின் செயலை ஐ.நா. அமைப்பு மற்றும் மற்ற சர்வதேச நிறுவனங்கள் பாராட்டியுள்ளன. கடந்த 2016-ம் ஆண்டில், உலகில் வேறு எந்த நாட்டையும் விட உகாண்டாவுக்கு அதிக அகதிகள் வருகை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை