கூட்டத்தில் வேனை செலுத்தி பயங்கரம் பார்சிலோனாவில் தீவிரவாதி தாக்குதலில் 13 பேர் பலி

தினகரன்  தினகரன்

பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நேற்று, சுற்றுலாத் தளம் ஒன்றில் கூட்டத்தினர் மீது வேனை மோதச் செய்து தீவிரவாதி ஒருவன் தாக்குதல் நடத்தினான். இதில், 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தல், துப்பாக்கியால் சுடுதல் போன்ற தாக்குதல் திட்டங்களை புறந்தள்ளிவிட்டு, இப்போது தீவிரவாதிகள் புது வகை தாக்குதல் யுக்தியை கையாண்டு வருகின்றனர். இதன்படி, கன ரக வாகனங்களை கூட்டத்தினர் மீது மோதச் செய்து, ஒரே நேரத்தில் பல உயிர்களை காவு வாங்குவதுதான் அவர்களின் புது வகை டெக்னிக். சமீபகாலமாக இதுபோன்ற தாக்குதல் யுக்தியை வெளிநாடுகளில் தீவிரவாதிகள் கையாண்டு வருகின்றனர்.இந்நிலையில், ஸ்பெயின் நாட்டின் சுற்றுலா நகரமான பார்சிலோனாவில், லாஸ் ராம்பிளாஸ் பகுதியில் நேற்று காலை ஏராளமான சுற்றுலா பயணிகள் கூடியிருந்தனர். அப்போது திடீரென வேன் ஒன்று கூட்டத்தினர் மீது மோதிக்கொண்டே வேகமாக சென்றது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, தாக்குதல் நடத்திய தீவிரவாதி தப்பி ஓடிவிட்டான். இது தீவிரவாதிகளின் தாக்குதல்தான் என்று அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு தேடுதல் வேட்டை தீவிரமாக நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை