இந்தியாவை கிண்டல் செய்யும் வீடியோ; சீன அரசு செய்தி நிறுவனம் விஷமம்

தினமலர்  தினமலர்
இந்தியாவை கிண்டல் செய்யும் வீடியோ; சீன அரசு செய்தி நிறுவனம் விஷமம்

பீஜிங்: இந்தியா - சீனா இடையே உள்ள எல்லைப் பிரச்னையில், இந்தியாவை கிண்டல் செய்யும் வகையில், சீன அரசு செய்தி நிறுவனம், ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளது.
சிக்கிம் எல்லையில் உள்ள டோக்லாம் பகுதியில், சாலை அமைக்க, சீனா முயன்றது. அதை, நம் படையினர், தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, இந்தியா - சீனா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளதால், இரண்டு மாதங்களுக்கு மேலாக, எல்லைப் பகுதியில், இரு நாட்டுப் படைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆக்கிரமிப்பு:


அமைதி பேச்சுக்கு தயார் என, இரு நாடுகளும் கூறி வருகின்றன. 'இருவரும் படைகளை திருப்பிக் கொள்ளலாம்' என, நம் அரசு கூறி வருகிறது. ஆனால், 'இந்தியா, அத்துமீறி ஆக்கிரமித்துள்ளது; படைகளை, எந்த நிபந்தனையும் இல்லாமல் திரும்பப் பெற வேண்டும்' என, சீன அரசு கூறிவருகிறது. இந்தப் பிரச்னையில், போரை ஊக்குவிக்கும் வகையில், சீன செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

விஷமம்:


இந்நிலையில், சீன அரசின் செய்தி நிறுவனமான, 'ஜியான்', ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. டோக்லாம் பிரச்னை குறித்தும், இந்தியர்களை கேலி செய்யும் வகையிலும் அமைந்துள்ள இந்த வீடியோ, சமூக தளங்களிலும் வெளியிடப்பட்டு உள்ளது.
ஒரு காட்சியில், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், 'அத்துமீறி நுழைந்தது, நல்லது, கெட்டது எது என்பதில் குழப்புவது, பாதிக்கப்பட்டவர்கள் மீது பழியைப் போடுவது, சிறிய அண்டை நாட்டை ஆட்டிப்படைப்பது, தவறு என்று தெரிந்தும் அதில் பிடிவாதமாக இருப்பது உட்பட, ஏழு பாவங்களை இந்தியா செய்துள்ளது' என, கூறியுள்ளார்.

கிண்டல்:


மூன்று நிமிடங்கள் உள்ள இந்த வீடியோவின் மற்றொரு காட்சியில், மிகப் பெரிய மீசை வைத்த ஒருவர் வருகிறார்... சீக்கியர்களை குறிக்கும் வகையில், அவரது வேடம் உள்ளது. அவரிடம், 'வீட்டுக்குத் திருடன் வந்தால், அவனுடன் பேச்சுவார்த்தையா நடத்துவது? உடனே, 911க்கு போன் செய்ய மாட்டாய்' என்கிறார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்.
911 என்பது அமெரிக்காவில் அவசர உதவிக்கு போலீசாரை அழைக்கும் தொலைபேசி எண். அமெரிக்காவின் உதவியை நாடுவதாக, நம் நாட்டை கிண்டல் செய்யும் வகையில், இப்படி பேசியுள்ளனர்.

விரட்டும் காட்சி:


அதற்கு, சீக்கிய வேடமணிந்தவர், 'எதற்கு, 911ஐக் கூப்பிடணும், விளையாடுவதற்கா' என, கேள்வி கேட்கிறார். அதற்கு, நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர், 'நீங்கள் விளையாடுவதற்கு என் வீட்டுக்குள் எப்படி வரலாம்? உடனே வெளியே போ' என, விரட்டுவதாக காட்சிகள் அமைந்து உள்ளன.

மூலக்கதை