கால்பந்தாட்டத்தில் களமிறங்க இருந்த உசைன் போல்ட் விலகல்!

PARIS TAMIL  PARIS TAMIL
கால்பந்தாட்டத்தில் களமிறங்க இருந்த உசைன் போல்ட் விலகல்!

தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசைன் போல்ட், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கால்பந்து விளையாட இருந்த நிலையில் காயம் காரணமாக அப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
 
தடகளப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ள உசைன் போல்ட், மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக கால்பந்து விளையாட இருந்த நிலையில் காயம் காரணமாக அப்போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
 
8 ஒலிம்பிக் தங்கப்பதக்கம், 11 முறை உலகச் சாம்பியன் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தடகளப் போட்டிகளில் ஜமைக்காவின் உசேன் போல்ட் தொடர் சாதனை படைத்து வந்துள்ளார். 
 
இவ்வாறு தடகளப் போட்டிகளில் பல சாதனைப் படைத்துள்ள உசேன் போல்ட், லண்டனில் சமீபத்தில் நடந்த உலக தடகளப் போட்டிகளில் ஒரே ஒரு வெண்கலம் மட்டும் வென்று ஓய்வு பெற்றார். 
 
இந்த சாதனை மன்னன், அடுத்ததாக, கால்பந்து போட்டியில் களமிறங்க இருந்தார். அதுவும், உலகப் புகழ்பெற்ற, மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாட இருந்தார். 
 
தனது கடைசி போட்டியில் காயமடைந்த அவர் உடல்நலம் தேறினால், செப்டம்பர் 2ம் தேதி நடக்க உள்ள மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையேயான போட்டியில் விளையாடுவார் என கூறப்பட்டது. 
 
மான்செஸ்டர் யுனைடெட் பவுண்டேசன் நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக நடத்தப்படும் இந்த காட்சிப் போட்டியில், மான்செஸ்டர் அணியின் ஜாம்பவான்கள் ரியான் கிக்ஸ், பால் ஸ்கோல்ஸ் போன்றோருடன் இணைந்து போல்ட் விளையாட இருந்தார்.
 
இதுகுறித்து பேசிய போல்ட், "கால்பந்து விளையாடுவது எனது கனவு, அதுவும் இங்கிலாந்தின் ஓல்டு டிராபோல்ட் மைதானத்தில் விளையாட வேண்டும் என்று எனக்கு நீண்ட நாள் ஆசை உள்ளது. அது நிறைவேறும் வாய்ப்பு கிடைத்துள்ளது" இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
 
இந்நிலையில், உசைன் போல்ட் காயம் காரணமாக மூன்று மாதங்கள் கட்டாய ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உள்ளதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அடுத்த மாதம் நடைபெற உள்ள கால்பந்து போட்டியில் அவர் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது. 
 
இந்த செய்தி உசைன் போல்ட் மற்றும் மான்செஸ்டர் அணியின் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

மூலக்கதை