காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம், திருவள்ளூர் மணல் குவாரிகளை திறக்க வேண்டும்: கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடிக்கு கடிதம்

சென்னை: தமிழ்நாடு மண் அள்ளும் இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்க தலைவர் கத்திப்பாரா ஜெனார்த்தனன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மண்ணோடும், மணலோடும் மண் அள்ளும் இயந்திரங்களோடும் போராடும் எங்களுக்கு மறுவாழ்வு தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு தங்களை வேண்டுகிறோம். மாட மாளிகையோடு, கூட கோபுரங்களோடு தமிழகத்தின் தலைநகரம் இன்று சிங்கார சென்னையாக உயர்ந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் காஞ்சிபுரம் மணல் குவாரிகளும், திருவள்ளூர் மணல் குவாரிகளும் தான் காரணம்.

இந்த இரு மாவட்ட மணல் குவாரிகள் திறக்கப்பட்டால் ரூ. 7000, ரூ. 8000க்கு மணல் கிடைக்கும்.

ஆனால் 350 கி. மீ. , தூரம் கடந்து போய் திருச்சியிலும், கரூரிலும் பல நாட்கள் காத்திருந்து மணல் வர வேண்டிய அவசியமில்லை.

கடந்த 25 ஆண்டுகளாக கருணாநிதி ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் 2 யூனிட் மணல் ரூ. 7000ஐ தாண்டியதில்லை. கட்டுமான தொழில் இந்த அளவுக்கு நலிவடைந்ததில்லை.

லாரி உரிமையாளர்களும், ஓட்டுனர்களும், கட்டுமான தொழிலாளர்களும் இந்த அளவுக்கு தொல்லையை அனுபவித்ததில்லை. அந்த இருபெரும் தலைவர்களின் நடவடிக்கையை பின்பற்றினால் மணல் விலை நான்கில் ஒரு பங்காக குறைய வாய்ப்புள்ளது.

மணல் அள்ளும் இயந்திரங்களின் விலை ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ரூ. 10லட்சம் உயர்ந்திருக்கிறது.

எனவே அரசாங்க வேலைகள், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து வேலைகள், மெட்ரோ ரயில் வேலைகள் மற்ற நிறுவனங்களின் வேலைகளிலும் வாடகையை உயர்த்தி தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

ஏரிமண் குவாரிகளை அதிகப்படுத்த வேண்டும். ஏரிமண் ஓட்டும் லாரிகளுக்கும், நலிந்து கொண்டிருக்கும் அதன் உரிமையாளர்களுக்கும், அவர்களை நம்பி வாழும் ஓட்டுனர்களுக்கும் இந்த அரசு பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.

இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் கட்டுமான தொழிலாளர்களும், ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் உங்களை கடவுளாக நினைப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுபோல் சங்க நிர்வாகிகள் கே. ராஜசேகரன், வி. ஆர். வெங்கடேஷ், எஸ். பி. ஆர். வெங்கடேஷ், எம். என். ஜே. சுகுமார், சி. எஸ். வாசன், அத்திப்பேடு கார்த்திக், சக்கரவர்த்தி, எக்ஸ்பிரஸ் எல்லப்பன், எஸ். கே. டி. அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தர வலியுறுத்தியுள்ளனர்.             

.

மூலக்கதை