சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

தமிழ் முரசு  தமிழ் முரசு
சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் மன உளைச்சல் போலீஸ்காரர் ரயிலில் பாய்ந்து தற்கொலை

ஆவடி: சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, சுப்லாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (27).

இவர், ஆவடி சிறப்பு காவல்படை காவலர் விடுதியில் தங்கியிருந்து சென்னையில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 10. 30 மணியளவில் ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம்  அருகே தண்டவாளத்தில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆவடி ரயில்வே போலீஸ் எஸ்ஐ நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பிரபாகரனின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
பூந்தமல்லியில் உள்ள 13-வது சிறப்பு காவல் படையில் பிரபாகரன் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகவில்லை.

கடந்த 11-ம் தேதி 8-வது சிறப்பு காவல் படைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.



இதனால் பிரபாகரன் மனஉளைச்சலில் இருந்துள்ளார். ஏற்கெனவே இவர் பணியில் இருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

எனவே, ரயில் முன் பிரபாகரன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்.

இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

மூலக்கதை